tamilnadu

img

க.பரமத்தி அருகே 900 ஆண்டுகள் பழைமையான மூன்று நடுகற்கள் கண்டுபிடிப்பு

கரூர் அருகே முன்னூர் எனும் ஊரில் 900 ஆண்டுகள் பழமையான மூன்று நடுகற்களை திருப்பூர் வீர ராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது. கரூர்க்கு 12 கிலோமீட்டர் மேற்கே அரவக்குறிச்சி வட்டத்தில் க.பரமத்தி அருகிலுள்ள முன்னூரில் இந்த அமைப்பினர் மேற்கொண்ட மேற்பரப்புக் கள ஆய்வில் பண்டைய கொங்கு மண்டல மக்களின் வாழ்வியலை எடுத்துக்காட்டும் சுமார் 900 ஆண்டுகள் பழைமையான மூன்று நடுகற்களைக் கண்டறிந்துள்ளனர்.இதைப் பற்றி வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய இயக்குனர் பொறியாளர் சு.ரவிக்குமார் கூறியதாவது: பண்டைய காலத்தில் மன்னர்களின் எல்லைக்குரிய நாட்டைக் காவல் செய்து வீரமரணம் அடைந்தோர்க்கு வீர நடுகற்கள் எடுத்து படையல் செய்து வழிபட்டு வந்த வழக்கம் இருந்துள்ளது. இவ்வழக்கம் ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகள் தமிழகத்தில் நின்று நிலவி வந்துள்ளது. நடுகற்களை ஓரிடத்தில் நட்டு, உணவு படைத்துப் பாடல்கள் பாடித் துணங்கை கூத்தாடி வழிபடுவதன் மூலம் தனக்கும் தன்னைச் சார்ந்தோருக்கும் பாதுகாப்பும், வலிமையும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதன் அடிப்படையில் நடுகல் வழிபாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வகையில் முன்னூரில் கிடைத்துள்ள முதல் நடுகல் 135 செ.மீ உயரம், 75 செ.மீ அகலம் கொண்டது. இந்நடுகல்லில் நின்றநிலையில் உள்ள மாவீரன் தனது வலது கையில் தன் இடுப்பில் சொருகியிருக்கும் குறுவாளை உருவியபடியும், இடது கையில் வில்லைத் தாங்கியபடியும் தன் தோளில் இரு பக்கமும் கேசங்கள் பறக்கும் நிலையில் போருக்கு தயாரான காட்சி அமைந்துள்ளது. இவ்வீரன் கையில் வீரக்காப்பும், கால்களில் வீரக்கழலும் அணிந்து இடையில் மட்டும் ஆடை அணிந்துள்ளார். 

குதிரை வீரன் நடுகல்:

120 செ.மீ உயரம், 60 செ.மீ அகலம் உடைய இவ்வீர நடுகல்லில் மாவீரன் குதிரையின் மேல் அமர்ந்தபடி தனது இடது கையில் குதிரையின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் கயிற்றைப் பிடித்தபடியும், வலது கையில் ஓங்கிய ஈட்டியுடனும் உள்ளார். வீரனின் அள்ளி முடிந்த குடுமி இடதுபுறம் சாய்ந்த நிலையிலும், கழுத்து மற்றும் கையில் அணிகலன்கள் அணிந்துள்ளார்.

வில் வீரன் சிற்பம்

120 செ.மீ உயரம், 60 செ.மீ அகலம் உடைய இவ்வீர நடுகல்லில், வீரன் நின்ற நிலையில் காட்டப்பட்டுள்ளார். வலதுகையில் குறுவாளும், இடது கையில் வில்லேந்தியும் தலையில் கொண்டையிட்டுத் தனது நீண்ட காதுகளில் மகரக் குழைகளும், மார்பில் கண்டிகையும், இடையில் மட்டும் ஆடை கட்டும், கால்களில் தொடுதோல் (காலணிகள்) அணிந்தும் மிக கம்பீரமாகக் காட்சியளிக்கிறார்.இம்மூன்று நடுகல்லிலும் எழுத்துப்பொறிப்புகள் இல்லை. இதன் அமைப்பை வைத்து பார்க்கும்போது மூன்றும் கி.பி 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும் என்று பொறியாளர் சு.ரவிக்குமார் கூறினார்.