காஞ்சிபுரம், மார்ச் 9- உத்திரமேரூர் வட்டத்தில் செயல்படும் கல்குவாரிகளால் கிராம மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். கல்குவாரிகளை மூட வலியுறுத்தி வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், அரும்புலியூர் குறுவட்டத்தில் உள்ள பழவேரி, அருங்குன்றம், தீத்தாவரம், மதூர், சிறுதாமூர், திருமுக்கூடல், பட்டா, சிறுமைலூர், பெற்பந்தல், குண்ணவாக்கம், சித்தாலப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் அரசின் அனுமதியோடு நடைபெற்றுவரும் கல்குவாரிகளால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். சக்திவாய்ந்த வெடியினால் ஏற்படும் அதிர்வினால் கிராமங்களில் உள்ள வீடுகள் விரிசல் விட்டு எப்போது இடிந்து விழும் என்ற அச்ச நிலையிலேயே கிராம மக்கள் வாழ்ந்துவருகின்றனர். இதனால் இரவு நேரங்களில் சாலையில் படுத்துறங்கும் நிலை உள்ளது. கல்குவாரிகளிலிருந்து இயக்கப்படும் லாரிகளால் இதுவரையிலும் பத்துக்கும் மேற்பட்ட விபத்து மரணங்கள் ஏற்பட்டிருப்பதால் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் முதல் பணிக்குச் செல்லும் பெரியவர்கள் வரை எப்போதும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இவ்வாறு கிராம மக்கள் எந்நேரமும் அச்ச நிலையிலேயே வைத்திருக்கும் கல்குவாரிகளை மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் பல போராட்டங்கள் நடத்தியும் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் பழவேரி, அரும்புலியூர் கிராமத்தில் சட்டவிரோதமாகச் செயல்படும் கல்குவாரியை மூட வேண்டும், அரசு அதிகாரிகள் துணையோடு இரவு பகலாக நடைபெற்றுவரும் கனிமவள திருட்டைத் தடுத்து நிறுத்திட வேண்டும், துணைபோகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும், பொதுமக்கள் கருத்துக் கேட்காமல் புதிய கல்குவாரிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதிகளை ரத்து செய்திட வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் உத்திரமேரூர் வட்டத் தலைவர் மு.உமேஷ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி மாவட்டத் தலைவர் மபா.நந்தன், நிர்வாகிகள் சதிஷ்பாபு, சதிஷ், இ.சங்கர், பாலா, காமராஜ், யுவராஜ் உள்ளிட்ட பலர் பேசினர். போராட்டத்தை நிறைவு செய்து மாநிலத் தலைவர் என்.ரெஜிஷ்குமார் பேசினார். ஆர்ப்பாட்டத்தின் நிறைவாகக் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை சங்கத்தின் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் பொன்னையா விடம் வழங்கினர்.