tamilnadu

img

காஞ்சிபுரம் (தனி) மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஜி.செல்வம் அபார வெற்றி

காஞ்சிபுரம், மே 23-காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கு திமுக சார்பில் ஜி. செல்வம், அதிமுக சார்பில் மரகதம் குமரவேல், அமமுக சார்பில் ஏ.முனுசாமி, நாம் தமிழர் கட்சி சார்பில் டி.சிவரஞ்சனி,  பகுஜன் சமாஜ் கட்சி சார்பில்  டி.சேகர் மற்றும் சுயேட்சைகள் உள்ளிட்ட 11 வேட்பாளர்கள் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டனர்.கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. நடைபெற்ற தேர்தலின் வாக்குப் பெட்டிகள் அனைத்தும் காஞ்சிபுரத்தை அடுத்த பொன்னேரிக்கரை சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.இதனைத் தொடர்ந்து வியாழனன்று (மே 23) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை பணி தொடங்கியது.  காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி வாக்குகள் 32 சுற்றுகளாக எண்ணப்பட்டன. வழக்கமாக தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும். ஆனால் இந்தத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின்  அறிவுறுத்தலின்படி தபால் வாக்குகள் இறுதியாக எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டது. முதல் சுற்றின் முடிவில் திமுக வேட்பாளர் செல்வம் அதிமுக வேட்பாளரை விட  வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் இருந்தார். இதனைத் தொடர்ந்து எண்ணப்பட்ட 10 சுற்றுகள் வரை தொடர்ந்து திமுக வேட்பாளர் செல்வம் முன்னணியில் இருந்தார். இந்நிலையில் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேலை விட 282826 வாக்குகள் வித்தியாசத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் ஜி.செல்வம் முன்னிலையில் இருந்தார்.செல்வம் 2 லட்சத்தி82 ஆயிரத்தி 826 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.செல்வம் 55.27 விழுக்காடுவாக்குகளும், அதிமுக வேட்பாளர் மரகதம் குமாரவேல் 32.11 விழுக்காடு வாக்குகளும் பெற்றனர்.நாம் தமிழர்வேட்பாளர் 5 விழுக்காடு வாக்குகளும், அமமுக வேட்பாளர் 4.4 விழுக்காடு வாக்குகளும் பெற்றனர்.