tamilnadu

காஞ்சிபுரத்தில்  5 பேர் இறந்ததை  அரசு மறைப்பது ஏன்?

 காஞ்சிபுரம், மே 28- கொரோனா வைரஸ் தொற்றால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஆனால், இந்த தகவலை தமிழக அரசு வெளியிடாமல் இருப்பது ஏன்? என்று கேள்வி எழுந்துள்ளது.  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, புதனன்று (மே 27) செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்றைய நிலவரப்படி 332 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 183 பேர் குணமடைந்துள்ளனர். 6 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார். ஆனால் தமிழக அரசு உயிரிழப்பு விவரங்களை குறைத்து காட்டி மோசடி செய்வதாக புகார் எழுந்துள்ளது. இந்த மாவட்டத்தில் ஏப்.25 அன்று குன்றத்தூர், கன்னியப்பன் நகரை சேர்ந்த தாமோதரன் (36) உயிரிழந்தார். இதன்பிறகு மே 11 அன்று குன்றத்தூரில் அங்கன்வாடி ஊழியரும், காஞ்சிபுரம் மசூதி தெருவைச் சேர்ந்த ராஜம்மாள், மே 12 அன்று பெரும்பாக்கத்தை சேர்ந்த தண்டாயுதபாணி (34), மே 13 அன்று ஆதனூரை சேர்ந்த மணிமாறன், மே 22 அன்று திருபெரும்புதூர் கிராம நிர்வாக அலுவலர் ராஜாராம் (39), மே 23 அன்று உத்திரமேரூர், ஒரக்காட்டுபேட்டை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் புஷ்பாவதி ஆகியோர் உயரிழந்துள்ளனர்.
மறைப்பது ஏன்?
ஆனால், தமிழக அரசு மே.28 அன்று வெளியிட்ட அறிக்கைப்படி ஒருவர் மட்டுமே உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 பேர் இறந்ததை மறைப்பது ஏன்? மதுபானக்கடைகள் பட்டியலை புள்ளி விவரத்தை துல்லியமாக வெளியிடும் அரசு, கொரோனாவால் மரணமடைந்தவர்கள் பட்டியலை வெளியிடுவதில் குழப்பம் செயவது ஏன்?