சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நடைபெற்ற போராட்டத்திற்கு தலைமையேற்ற சிஐடியு மாவட்ட செயலாளர் இ. முத்துக்குமாரை கைது செய்ததற்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்ததோடு, உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சட்டம் தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ள உரிமையின் அடிப்படையில் தங்களுக்கு விருப்பமான தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பது அவர்களின் முக்கிய கோரிக்கை. ஆனால், சாம்சங் நிர்வாகம் இந்திய சட்டத்தை மதிக்க மாட்டோம் என்று பிடிவாதமாக மத்திய தொழிற்சங்கமான சிஐடியு சங்கத்தை ஏற்க மறுத்து பிடிவாதம் பிடித்து வருவது கடும் கண்டனத்திற்குரியது.
இந்த நிலையில், இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு தொழிலாளர்கள் ஊர்வலமாக சென்று தங்களது கோரிக்கை மனுவை அளிப்பது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்தது மட்டுமல்லாமல், இந்த போராட்டத்தை தலைமையேற்று நடத்தி வரும் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும், சிஐடியு மாவட்ட செயலாளருமான இ. முத்துக்குமாரை இன்று காலை 7.30 மணிக்கே சிஐடியு அலுவலகத்திலிருந்து கைது செய்து எங்கு வைக்கப்பட்டிருக்கிறார் என்பதையே மாவட்ட நிர்வாகம் மூடி மறைப்பது பலவிதமான சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. அவர் காவல்துறையின் கடுமையான தாக்குதலுக்கும், சித்ரவதைக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளாரோ என்ற சந்தேகம் எழுகிறது. மவாட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோதும் தகவல் தெரிவிக்க மறுக்கிறார்கள். அரசின் இந்த அணுகுமுறை தொழிலாளர் விரோத போக்கையே வெளிப்படுத்துகிறது. இத்தகைய செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது.
தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு, முத்துக்குமார் அவர்கள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள நிலையிலிருந்து அவரை விடுவிக்க வேண்டும். தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையான சங்கம் வைக்கும் உரிமையை அங்கீகரித்து ஏற்பதற்கு சாம்சங் நிறுவனத்தை வலியுறுத்த வேண்டும். மேலும், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து தொழிலாளர்களையும் விடுதலை செய்வதுடன், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் போன்ற ஜனநாயகப் பூர்வமான இயக்கங்களுக்கு அனுமதி தராமல் மறுக்கம் காவல்துறையின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படுத்த தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வற்புறுத்துகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.