காஞ்சிபுரம்,பிப்.13- சாம்சங் ஆலையில் பயிற்சியற்ற ஒப்பந்த தொழிலாளர்களை வைத்து சட்டவிரோதமாக உற்பத்தி நடைபெறுவதாக சிஐடியு குற்றச்சாட்டு.
சாம்சங் ஆலையில், தொழிற்சங்கம் அமைத்ததற்காக 3 தொழிலாளர்கள் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து 9ஆவது நாளாகத் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சாம்சங் ஆலையில் பயிற்சியற்ற ஒப்பந்த தொழிலாளர்களைக் கொண்டு சட்ட விரோத உற்பத்தி நடைபெறுவதாகவும், அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தொழிலக பாதுகாப்பு இணை இயக்குநர் இளங்கோவனிடம் சிஐடியு காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் இ.முத்துகுமார் புகார் மனு அளித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது;
சட்டப்படி சங்கம் பதிவு செய்த பிறகும் கூட சாம்சங் நிறுவாகம் அதனை ஏற்க மறுப்பதோடு, தொழிலாளர்களை பணியிடை நிக்கம் செய்து பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதுமட்டுமின்றி போட்டி அமைப்புகளை ஏற்படுத்தி அதனை வலுப்படுத்த 1000க்கும் மேற்ப்பட்ட பயிற்சியற்ற ஒப்பந்த தொழிலாளர்களைக் குவித்து சட்டவிரோதமாக உற்பத்தியை நடத்துகிறது.
மேலும் தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மிரட்டுவதாகவும் அரசு உடனடியாக தலையிட்டு தொழிலாளர் நலனைக் காக்க முன்வரவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.