tamilnadu

வார்டு மறுவரையறை கருத்துக் கேட்பு கூட்டம்

கள்ளக்குறிச்சி. மார்ச், 8-  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகளை சீரமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாநில தேர்தல் ஆணையர் இரா.பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவரும் மறுவரையறை அலுவலருமான கிரண்குராலா  வரவேற்றார். திமுக, சிபிஎம், சிபிஐ, அதிமுக, தேமுதிக, அமமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் பொது மக்கள் பலர் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்தனர். பெரிய ஊராட்சிகளாக உள்ள பல்வேறு கிராமங்களை பிரிக்க வேண்டும், 37 கிராமங்களை கொண்ட வெள்ளிமலை ஊராட்சியை பிரிக்கவேண்டும். கள்ளக்குறிச்சி நகராட்சியில் வார்டுகளின் எண்ணிக்கையை அதிகரித்து சீரமைக்க வேண்டும், ஒரு ஒன்றியத்திற்கு மூன்று மாவட்ட கவுன்சிலர் இடங்களை உருவாக்க வேண்டும், வாக்காளர் ஓட்டுச்சாவடி மற்றும் வார்டுகள் மறு வரையறை பட்டியல் சம்பந்தமான ஆவணங்களை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி களுக்கும் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் வழங்க வேண்டும். மணலூர்பேட்டை பேரூராட்சியை தலைமை இடமாகக் கொண்டு தனி ஊராட்சி ஒன்றியமாக அறிவிக்க வேண்டும், வாணாபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு பேரூராட்சி உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கூறினர். இயக்குனர் பழனிசாமி பேசுகையில்,“ தற்போது உள்ள மாவட்ட வார்டுகள், ஒன்றிய வார்டுகள் அப்படியேதான் இருக்கும். எண்ணிக்கையை உயர்த்த தற்போதைக்கு இயலாது. பகுதிகள் மாற்றியமைப்பது, இட ஒதுக்கீடு போன்றவை உரிய அலுவலர்கள் மூலம் மறு சீராய்வு செய்து சீரமைக்கப்படும்” என்றார். மணலூர்பேட்டை பேரூராட்சி ஊராட்சி ஒன்றியம் ஆக மாற்ற பரிசீலனை செய்யப்படும் என்றார்.