கடலூர், மே 13-சர்க்கரை ஆலை அதிபருக்கு எதிராக மனுக்கள் குவிந்து வருவதால் அவரை கைது செய்ய வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் ஸ்ரீஅம்பிகா, ஏ.சித்தூரில் திருஆரூரான் ஆகிய சர்க்கரை ஆலைகளை சென்னை கோட்டூர் புரத்தைச் சேர்ந்த ராம். வி. தியாகராஜன் நடத்தி வருகிறார். இவர், கடலூர் மாவட்டத்தில் 11,523 விவசாயிகளிடம் கடந்த 2016-17, 2017-18 ஆம் ஆண்டுகளில் கரும்பு கொள்முதல் செய்ததற்கு பணம் வழங்க வில்லை. ஆனால், விவசாயிகள் பெயரில் அவர்களுக்குத் தெரியாமலே வங்கியில் கடன் பெற்றுள்ளார். இவ்வாறு ரூ.88.51 கோடி கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மங்களூர் வட்டம் கச்சிமையிலூரைச் சேர்ந்த ச.ஸ்டாலின் (36) என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் அண் மையில் புகார் அளித்தார். மேலும், பல்வேறு விவசாய அமைப்புகளும் போராட்டங் களை நடத்தி வந்தன. இந்த புகார்கள் குறித்து உரிய விசாரணை நடத்த மாவட்ட காவல் துறைக்கு ஆட்சியர் பரிந்துரைத் தார். அதன்பேரில் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தியாகராஜனை சென்னையிலிருந்து கடலூருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவர் கடலூருக்கு அழைத்து வரப்பட்டதால் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. பிறகு, விசாரணைக்கு மட்டுமே அழைத்து வரப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட் டது. அப்போது, அந்த கடனை திரும்பச் செலுத்துவதற்கு கால அவகாசம் கேட்டதால் திருப்பி அனுப்பப்பட்டார்.இந்த சம்பவம் சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோசடியில் வங்கி அலுவலர்களுக்கான தொடர்புகள் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.இந்நிலையில், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன், பொதுச்செயலர் டி.ரவீந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் உள் ளிட்டோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அதில், சர்க்கரை ஆலை உரிமையாளரை கைது செய்து, அவரது சொத்துக்களை ஜப்தி செய்து விவசாயிகள் பெயரில் வங்கியில் பெற்ற கடனை திரும்ப அடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். இதுதொடர்பாக வரும் ஜூன் 2 ஆம் தேதி கடலூரில் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளதாவும் தெரிவித்திருந்தனர்.மேலும், இந்த வழக்கு தொடர்பாக தங்களிடமுள்ள ஆவணங் களை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.இதற்கிடையே, சர்க்கரை ஆலை உரிமையாளருக்கு எதிராக விவசாயிகள் தங்களிடமுள்ள ஆவணங்களை வழங்க தயக்கம் காட்டி வருகிறார்கள். சுமார் 1500விவசாயிகளின் பெயரில் வங்கியில் கடன் பெறப்பட்டுள்ளது. 20 பேர் மட்டுமே அதற்கான ஆவணத்தை அளித்துள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் கூறப் படுகிறது.