கடலூர், ஏப். 20-சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஏப்ரல் 18 ஆம் தேதி நடந்த மக்களவைத் தேர்தலின்போது அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. சம்பவம் நடைபெற பகுதி கடலூர் மாவட்ட எல்லைக்கு அருகில் அமைந்துள்ளதாலும், சம்பவம் நடைபெற்ற பகுதி சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதி என்பதாலும் மாவட்டத்திலும் அதன் தாக்கம் உள்ளது. இதனையடுத்து, சமூக வலைத்தளங்களில் சிலர் மற்றொரு தரப்பினரிடை அவதூறு செய்யும் வகையில் திட்டமிட்டு தகவல்களை பரப்பி வருவதாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன.இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் கூறியதாவது:மாவட்டத்தில் யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது உரியநடவடிக்கை எடுக்கப்படும். எங்காவது சிறிய அளவிலான பிரச்சனை ஏற்பட்டாலும் அதனை உடனடியாக காவல்துறையின் கவனத்திற்கு எடுத்து வர வேண்டும். புதிய பிரச்சனைகளை உருவாக்கக் கூடாதென அரசியல் கட்சியினரிடம் தெரிவித்துள்ளோம். சமூக வலைத்தளங்களில் சாதி உணர்வைத் தூண்டும் வகையில் பதிவுகள் வெளியிடக் கூடாது. அவ்வாறு வெளியிட்டால் அவர்களை காவல்துறையினர் கண்டுபிடித்து உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பொதுமக்களும் வீண் வதந்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டார்.