tamilnadu

என்எல்சி விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.30 லட்சம் நிவாரணம்

கடலூர், ஜூலை 2 - கொதிகலன் (பாய்லர்) வெடித்து ஏற்பட்ட விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா 30 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க என்எல்சி நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. என்எல்சி இரண்டாவது அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 6 தொழிலாளர்கள் பலியாகினர். 17 தொழிலாளர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கான நிவாரணம் வழக்குவது தொடர்பான பேச்சுவார்த்தை இரண்டு நாட்களாக நடைபெற்றது. இதில் என்எல்சி தலைவர், இயக்குனர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் என்எல்சி நிர்வாகம் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலையும், இழப்பீட்டு தொகையாக தலா 30 லட்சம் ரூபாய் வழங்கவும், காயம் அடைந்தவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும் வழங்க ஒப்புக் கொண்டது. கடந்த மே மாதம் ஏற்பட்ட விபத்தில் பலியான 5 தொழிலாளர்களுக்கும் இதே நிவாரணத்தை வழங்குவது என்றும் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டது.