சேவூர் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கும் விழா புதனன்று நடைபெற்றது. அவிநாசியை அடுத்த சேவூர் ஊராட்சி பகுதியில் உள்ள சாலையப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 70 ஆண்டுகளான பழமையான இப்பள்ளியில் அருகில் உள்ள கிளாகுளம், ராமியம்பாளையம், அய்யங்காடு, சாலையப்பாளையம், வையாபுரிக்க வுண்டன் புதூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் புதனன்று கல்வி சீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் பி.சுவாமிநாதன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மைக்குழு செயலாளர் பிரபு, பள்ளி தலைமையாசிரியர் மல்லிகா, பெற்றோர்ஆசிரியர் கழக தலைவர் கே.திருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பள்ளி முன்னாள் மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சீலீங்பேன், மேசை நாற்காலி, சுவர் கடிகாரம், சேர்கள், பள்ளி தேவையான பிளாஸ்டிக் பொருட்கள், எழுதுபொருட்கள் உட்பட ஏராளமான சீர்வரிசை பொருட்களை மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்து பள்ளிக்கு வழங்கினர். இதைத்தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.