சிதம்பரம், மே 27-கடலூர் மாவட்ட டெல்டா பகுதி விவசாயிகளுக்கு மிகப்பெரிய நீர் ஆதாரமாக காட்டுமன்னார்கோயில் அருகேயுள்ள வீராணம் ஏரி விளங்கி வருகிறது. அதோடு சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும் இந்த ஏரிக்கு முக்கிய பங்கு உண்டு.47.50 அடி மொத்த கொள்ளளவு கொண்ட இந்த ஏரியின் நீர்மட்டம் 45.40 அடியாக குறைந்ததால் கடந்த 10 தினத்திற்கு முன் அணைக்கரையில் உள்ள கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 500 கன அடி வீதம் தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருந்ததால் ஏரியின் நீர்மட்டம் படிப் படியாக உயர்ந்து, 46 அடியானது.தொடர்ந்து தண்ணீர் வந்துகொண்டிருந்ததால் கீழணையில் நீர்மட்டம் வேகமாக குறைந்தது. இதன் காரணமாக கடந்த 5 நாட் களுக்கு முன்பு கீழணையில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. கோடை வெயில் சுட்டெரிப்பதால் சென்னையில் குடிநீர் தேவை அதிகரித்துள்ளது. எனவே சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 45 கனஅடி முதல் 60 கன அடி வரை தண்ணீர் அனுப்பப்பட்டு வந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் வெய்யிலின் தாக்கம் கடுமையாக இருந்து வருகிறது. இதனால் ஏரியின் நீர் மட்டம் படிபடியாக குறைந்து 45அடிக்கும் கீழ் வந்துள்ளது. கோடைகாலத்தில் சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சனையை சமாளிக்க சென்னை குடிநீர் வடிகால் வாரியம் வீராணம் ஏரியில் போதிய தண்ணீரை எடுத்து வரும் நிலையில் என்எல்சி சுரங்க தண்ணீர் தேக்கபடும் வடலூர் அருகே பரவனாற்றில் இருந்து வினாடிக்கு 14 கன அடி தண்ணீரை சென்னை குடிநீருக்கு அனுப்பி வருகிறார்கள். சென்னையின் குடிநீர் தட்டுபாட்டை போக்கும் மாவட்டமாக கடலூர் உள்ளது.