கடலூர், மே 11- விருத்தாசலம் அருகே கல்லூரி மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கடலூர் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விருத்தாசலம் அருகேயுள்ள கருவேப்பிலங்குறிச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவி திலகவதியை, வீடுபுகுந்து கத்தியால் குத்திக் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. இச்சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.மாணவி கொலை வழக்கில் ஆகாஷ் என்பவனை காவல் துறையினர் கைது செய்துள்ள நிலையில், படுகொலையைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம், மறியலில் தனிப்பிரிவு காவலர்கள் நடந்து கொண்ட முறை, காவல் நிலையத்தில் ரகசியமாக பெறப்பட்ட வாக்குமூலம் குறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி இருப்பது ஆகியவை சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.ஆகவே, மாணவி திலகவதி கொலை வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி விசாரணை நடத்தி, இதில் தொடர்புடையவர்களுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமெனவும், மாணவியின் குடும்பத்திற்கு உரிய நஷ்டஈடும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இத்துயர சம்பவத்தையொட்டி பதட்டமான சூழல் ஏற்படுவதை தடுக்க காவல்துறை உரிய பாதுகாப்பும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.