குடவாசல்,ஏப்.22- அம்மா உணவகங்களில் கட்சி அரசியலை புகுத்த வேண்டாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. உணவகத்திற்குள் ஆளும்கட்சியின் நடவடிக்கையை புகுத்து வதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அம்மா உணவகம் என்ற பெயரில் தமிழக அரசு மலிவு விலையில் மக்களுக்கு உணவு கிடைக்கும் வகையில் உணவகங்கள் நடத்தி வருகின்றது. தற்போது அம்மா உணவகத்தில் அரசியல் புகுந்துள்ளது ஏற்புடையது அல்ல.
தற்போது இந்த உணவகங்களில் திருவாரூர் மாவட்ட அதிமுக சார்பாக பொது மக்களுக்கு உணவு வழங்கப்படும் என்று அதிமுக கட்சியின் மாவட்ட செயலாளரும் உணவுத்துறை அமைச்சருமான ஆர்.காமராஜ் அறிவிப்பு செய்தது குறித்து நாளிதழில் வெளிவந்துள்ளது. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. அரசு நடத்தும் உணவகங்களில் அனைத்து மக்களும் சென்று உணவு அருந்தும் நிலை உள்ளது. இவை ஒரு சார்பாக ஒரு கட்சியின் சார்பாக உணவு வழங்குவதாக அறிவிக்கும் போது அனைவரும் செல்ல தயக்கம் ஏற்படும். அரசு நடத்தும் அனைத்து உணவகங்களுக்கும் சிறப்பு நிதி ஒதுக்கி அனைத்து மக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்த வேண்டும்.
இதுபோன்று அரசியல் கட்சியினரிடம் ஒப்படைத்தால் நிர்வாகம் சீர்கெட வாய்ப்பு உள்ளது,ஆகவே சம்பந்தப்பட்ட நிர்வாகமும் மாவட்ட ஆட்சியரும் உடனடியாக தலையிட்டு அம்மா உணவகத்தை அரசே நடத்த வழிவகுக்க வேண்டும் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.