tamilnadu

img

ஜப்பானை நோக்கி நகர்ந்து வரும் இரண்டு புதிய புயல்கள்

ஜப்பானை நோக்கி மேலும் இரண்டு புயல்கள் நகர்ந்து வருவதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜப்பான் தலைநகரான டோக்கியோவுக்கு தென்மேற்கில் உள்ள ஈசு தீபகற்பத்தில், கடந்த 12-ஆம் தேதி ஹகிபிஸ் புயல் கரையை கடந்த நிலையில், அப்பகுதியை புயல் கடுமையாக தாக்கியது.  கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பலத்த காற்றுடன் மழை வெள்ளம் காரணமாக குறைந்தது 79 பேர் பலியாகி உள்ளதாகவும் 2,400 வீடுகள் சேதமடைந்ததாகவும் ஜப்பான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது நியோகுரி மற்றும் புலாய் ஆகிய இரண்டு புயல்கள் ஜப்பானை நோக்கி நகர்ந்து வருவதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு பசிபிக் பெருங்கடலில் மையம் கொண்டுள்ள இந்த புயல்களால் அதிக அளவில் மழைப்பொழிவு ஏற்பட்டு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

நியோகுரி புயல் டோக்கியோ நகரின் தெற்கு மற்றும் தென்மேற்கு கடற்கரை பகுதிகளில் நாளை அதிகாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 162 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், புலாய் புயல், வரும் 26-ஆம் தேதி இரவு ஜப்பானின் தெற்கு மற்றும் கிழக்கு கடற்கரை பகுதிகளில் கரையை கடக்கும் எனவும், மணிக்கு 180 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், வடக்கு மரியானா தீவுகளில் இந்த புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.