1970 - இறந்தபின் ‘ஃபார்முலா ஒன் உலக ஓட்டுநர் சாம்ப்பியனாக’ ஆன ஒரே மனிதரான, ஆஸ்திரிய அணியின் ஜோச்சென் ரிண்ட், இத்தாலிய கிராண்ட் ப்ரிக்ஸ் போட்டிகளுக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விபத்து ஏற்பட்டு பலியானார். படுத்துக்கொண்டு தேர்தலில் வெல்லலாம், ஆனால், அதெப்படி இறந்தபின் சாம்பியனாக முடியும்? ஒவ்வோராண்டின் சாம்பியன்ஷிப்பும், அந்தத் தொடரில் நடைபெற்ற பல்வேறு பந்தயங்களில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பந்தயத்திலும் முதல் சில இடங்களைப் பெறுபவர்களுக்கு, இடத்திற்குத் தக்கவாறு புள்ளிகள் வழங்கப்படுகின்றன. 1950இல் தொடங்கப்பட்ட இந்த சாம்பியன்ஷிப்பில், 1959வரை முதல் 5 இடங்களுக்கும், பின்னர் படிப்படியாக விரிவாக்கப்பட்டு தற்போது முதல் 10 இடங்களுக்கும் புள்ளிகள் வழங்கப்படுகின்றன. அத்துடன், மிகவிரைவாக முடிக்கப்பட்ட சுற்று, சிறப்பான வெற்றிகள் முதலானவற்றுக்கும் புள்ளிகள் வழங்கப்படுகின்றன. 1970இன் சாம்பியன்ஷிப்பில் மார்ச் 7இலிருந்து, அக்டோபர் 25வரை, 13 பந்தயங்கள் நடைபெற்றன. முதல் 9 பந்தயங்களில், 5இல் முதலில் வந்து வெற்றிபெற்றிருந்த ரிண்ட், பத்தாவது பந்தயத்துக்கான பயிற்சியின்போது பிரேக் செயலிழந்ததில் விபத்து ஏற்பட்டு, சீட் பெல்ட் கழுத்தை இறுக்கியதில் உயிரிழந்தார். பொதுவாக இந்த சாம்பியன்ஷிப் போட்டியில், எல்லாப் பந்தயங்களும் முடிவதற்குமுன்பே, கணக்கியலின்படி மற்றவர்கள் கடக்க முடியாத அளவு புள்ளிகளை ஒருவர் பெற்றுவிட்டால், அவரது வெற்றி உறுதியாகிவிடும். ரிண்ட் இறக்கும்போது அவ்வாறான வெற்றி உறுதிசெய்யப்பட்ட நிலையில் இல்லாவிட்டாலும்கூட, அவருக்கு அருகாமை புள்ளிகள்கொண்ட போட்டியாளரான ஜாக்கி இக்ஸ் போதிய புள்ளிகளை எடுக்காததால், அடுத்த இரண்டு போட்டிகளின் முடிவிலேயே ரிண்ட்தான் சாம்பியன் என்பது உறுதியானது. அனைத்துப் பந்தயங்களும் முடிவதற்குமுன்பே வெற்றி உறுதியானாலும், இறுதியில்தான் சாம்பியன் பட்டம் வழங்கப்படும். அதன்படி, இறந்து 50 நாட்களுக்குப்பின் உலக சாம்பியன் ஆனார் ரிண்ட். மொத்தம் 61 க்ராண்ட் ப்ரிக்ஸ் பந்தயங்களில் பங்கேற்று, ஆறில் முதலிடத்தையும், 13 போடியம் ஃபினிஷ்களையும் வென்றுள்ளார் ரிண்ட். மோட்டார்ப் பந்தயங்கள் உள்ளிட்ட பல விளையாட்டுப் போட்டிகளில், முதல் மூன்று இடங்களுள் வந்து, மேடையில் ஏறிப் பதக்கம் பெறுவது போடியம் ஃபினிஷ் என்று அழைக்கப்படுகிறது. இறந்தபின் உலகச் சாம்பியன் ஆன மனிதர் என்ற தனிச்சிறப்பு இன்றுவரை ரிண்ட்டுக்கு மட்டுமே உள்ளது!