பாகிஸ்தானின் முன்னாள் அதிபரான பர்வேஸ் முஷாரஃப்புக்கு சிறப்பு நீதிமன்றம் அளித்த மரண தண்டனையை லாகூர் உயர் நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.
பாகிஸ்தானின் முன்னாள் அதிபரான முஷாரஃப், கடந்த 2007-ல் அந்நாட்டு அரசியலமைப்பை முடக்கி திடீரென அவசர நிலையைப் பிரகடனப்படுத்தினார். இவரது செயலுக்கு உலகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்ததால் தன் அதிபர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நேரடியாகத் தேர்தலைச் சந்தித்துத் தோல்வியடைந்தார். இதை அடுத்து, அரசியலமைப்பை முடக்கியது, தேசத்துரோகம், பெனசிர் பூட்டோ கொலை விவகாரம் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டன. கடந்த 2013-ஆம் ஆண்டு முஷாரஃப்புக்கு எதிரான தேசத்துரோக வழக்கு அந்நாட்டு சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கு பல இடையூறுகளுடன் நீண்ட நாட்களாக நடந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு, இந்த வழக்கில் முஷாரஃப்புக்கு மரண தண்டனை விதித்து, அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இது பாகிஸ்தானில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் துபாயில் சிகிச்சை பெற்று வரும் முஷாரஃப் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் முற்றிலும் அரசியல் பழிவாங்கும் நோக்கம் கொண்டது என்று தெரிவித்தார்.
இந்நிலையில், முஷாரஃப்புக்கு எதிரான புகார் பதிவு செய்தது, நீதிமன்ற உருவாக்கியது, அரசு வழக்கறிஞர்கள் தேர்வு செய்தது, அனைத்தும் சட்ட விரோதமாக நடந்துள்ளதால், சிறப்பு நீதிமன்றம் விதித்த மரண தண்டனைத் தீர்ப்பை சட்ட விரோதமானது என்றும், இந்தத் தீர்ப்பு செல்லுபடியாகாது என்றும் லாகூர் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.