tamilnadu

img

மாநிலங்களிடம் மோடி அரசாங்கம் கோரும் அடிமை சாசனம்

கோவிட் 19 வைரசை எதிர்கொள்வதில் மாநில அரசாங்கங்களுக்கு எவ்வித நிதி உதவியும் அளிக்கப்படவில்லை. மாநில அரசாங்கங்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய ஜி.எஸ்.டி. பங்கு போன்ற நிதியும் தரப்படவில்லை. உற்பத்தி பெருமளவு வீழ்ச்சி  அடைந்த பின்னணியில் மாநில மக்களுக்கும் தொழில்கள் மற்றும் விவசாயத்திற்கும் போதிய நிவாரணமும் மோடி அரசால் தரப்படவில்லை.இத்தகைய சூழலில்தான் மாநில அரசாங்கங்கள் தமது நிதி தேவைக்கு கடன் வாங்கும் உச்சவரம்பை அதிகரிக்குமாறு கோரின. நிதி திரட்டலுக்கு வேறு வழியே இல்லாமல்தான்இந்த கடினமான ஆலோசனையை மாநில அரசாங்கங்கள் முன்வைத்தன.

கடனுக்கு கொடூரமான நிபந்தனைகள்!
தற்பொழுது உள்ள உச்சவரம்பின் படி மாநில அரசாங்கங்கள் தமது மாநில ஜி.டி.பி.யில் 3% வரை மட்டுமே கடன் வாங்க முடியும். இந்த உச்சவரம்பை நீக்குமாறு முதன்முதலில் கேரள இடதுஜனநாயக முன்னணி அரசாங்கம் தான் கோரிக்கையை
எழுப்பியது. பின்னர் பல மாநிலங்களும் இதே கோரிக்கையை முன்வைத்தன. நாட்கள்பல கடந்தாலும் மோடி அரசாங்கம், இந்த கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. இறுதியில் சில நாட்களுக்கு முன்பு மோடி அரசாங்கம், மாநில அரசாங்கங்கள் கடன்பெறும் உச்சவரம்பை தமது ஜி.டி.பி.ல் 5%  - அதாவது கூடுதலாக 2% கடன் பெறலாம் என உயர்த்தி அறிவித்தது. ஆனால் அதற்கு பல நிபந்தனைகளையும் முன்வைத்தது. 

கடன் பெறுவதற்கு என்ன வழிமுறைகள்? 

கூடுதல் 2%ல் 0.5% கடன் மட்டுமே எவ்வித நிபந்தனையும் இல்லாமல் பெற இயலும்.

மீதம் 1.5% உள்ளது. இதில் 1% கடன் 0.25% வீதம் 4 தவணைகளில் 4 நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் பெறலாம். அதாவது ஒவ்வொரு நிபந்தனைக்கும் ஒவ்வொரு 0.25% கடன் கிடைக்கும்.

மீதமுள்ள 0.5% கடன் தொகை மோடி அரசாங்கம் முன்வைக்கும் 4ல் குறைந்த பட்சம் 3% நிபந்தனைகளை அமலாக்கி இருந்தால் மட்டுமே கிடைக்கும்.

மோடி அரசாங்கம் முன்வைக்கும் 4 நிபந்தனைகள் என்ன?

1. மின் விநியோகம் முற்றிலும் தனியார்மயப்படுத்த வேண்டும். 

2. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வருமானம் அதிகரிக்க வேண்டும்.

3. மாநில உணவு நலத்திட்டங்கள் மைய அரசாங்கத்தின் திட்டங்களுடன் இணைக்கப்பட வேண்டும்.

4. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எவ்வித கேள்வியும் கேட்காமல் தொழில் நடத்த அனுமதி வழங்க வேண்டும்.(Ease of doing business)

இலவச மின்சாரத்துக்கு ஆபத்து
இந்த நான்கு நிபந்தனைகளுமே ஒரு புறம், மாநிலங்கள் உருவாக்கியுள்ள தனித்துவ திட்டங்களுக்கு வேட்டு வைக்கும். மறுபுறத்தில், மக்கள் மீது கூடுதல் சுமையையும் துன்பங்களையும் உருவாக்கும். இவை முற்றிலும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவானவை என்பதை கூறத்தேவை இல்லை.

மின்விநியோகம் தனியார்மயம் ஆவதன் விளைவாக  மின்சார கட்டணம் உயரும் அபாயம் உடனடியாக உருவாகும். மின்சாரம் என்பது மக்களின் இன்றியமையாத தேவையாக உருவாகியுள்ளது. எனவேதான் பல மாநிலங்களும் அடித்தட்டு மக்களுக்கு 
மின்சாரத்தை இலவசமாக அல்லது குறைந்த விலையில் தருகின்றன. இதனால் ஏற்படும்

இழப்பின் ஒரு பகுதி தொழில்துறையிடமிருந்து பெறப்படுகிறது. மின்விநியோகம் தனியார்மயம் எனும் நிபந்தனை மின்சாரத்தை ஏழை மக்களுக்கு எட்டாக்கனியாக மாற்றும் அவலத்தை உருவாக்கும்.

நகர்ப்புற வரிகள் உயரும் ஆபத்து
மற்றொரு நிபந்தனையான நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் வருமானம் உயர்த்த வேண்டும் என்பதன் பொருள் என்ன? நகர உள்ளாட்சி அமைப்புகள் வரிகளை உயர்த்த வேண்டும் என்பது பொருளாகும். வீட்டு வரி/ தண்ணீர் வரி/ ஆவணங்களை பெறுவதற்கான கட்டணம்/ பாதாள சாக்கடை கட்டணம் போன்ற அனைத்தும்பெருமளவுக்கு உயர்த்தப்பட வேண்டிய நிலை உருவாகும். நகர்ப்புறங்களில் வசிக்கும்முறைசாரா  உழைப்பாளிகள்/ மாத ஊதியம் பெறுவோர்/ ஆலைத் தொழிலாளர்கள் என
அனைவரும்  பாதிக்கப்படுவார்கள்.

மாநிலங்களின் உணவு நலத் திட்டங்கள் மத்திய அரசாங்க திட்டங்களுடன் இணைக்கப்பட வேண்டும் என்பது இன்னொரு நிபந்தனை! ‘ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு’ என்பது மட்டுமல்ல; சில மாநிலங்களின் குறிப்பான தனித்துவ மக்கள் நலத்திட்டங்கள்
ஆபத்தில் சிக்கும். உதாரணத்திற்கு கேரள அரசாங்கம் அரிசி/ கோதுமை மட்டுமல்லாது பல பொருட்களை நியாயவிலை மூலம் தருகிறது. இதனை மத்திய அரசாங்கம் நிறுத்தும்ஆபத்து உருவாகும். தமிழக அரசாங்கம் அடித்தட்டு மக்களுக்கு இலவச அரிசி அளிக்கிறது.

இது மத்திய அரசாங்க திட்டத்தில் பொருந்தாது எனில் இதுவும் நிறுத்தப்படும் அபாயம்உருவாகும். தனது குடோன்களில் உணவு தானியங்கள் நிரம்பி வழியும் இந்த தருணத்தில்கூட மத்திய அரசாங்கம் ஏழைகளுக்கு போதுமான அளவு தரவில்லை என்பதை வேதனையுடன் தேசம் பார்த்தது. இதே இரக்கமற்ற தன்மையுடன்தான் எதிர்காலத்திலும் மத்திய அரசாங்கம் செயல்படும். எனவே இதுவும் மக்களுக்கு எதிரானதுதான்!

கார்ப்பரேட்டுகளுக்கு கொள்ளை அடிக்க அனுமதி
அடுத்த நிபந்தனை கார்ப்பரேட்டுகளுக்கு கேள்வி கேட்காமல் தொழில் நடத்தும் உரிமை தருவதாகும். இதனை பல மாநில கட்சிகள் ஏற்றுக்கொள்ளும் நிலை உருவாகலாம். எனினும் எவ்வித நிபந்தனையும் இல்லாமல் தொழில் நடத்தும் உரிமை என்பது மாநில வருவாயை கடுமையாக பாதித்து உள்ளது என்பதே கடந்த கால அனுபவம். நிலம்/ நீர்/ காற்று ஆகிய இயற்கை வளங்களை வரம்பில்லாமல் கொள்ளை அடிக்கும் அனுமதியை கார்ப்பரேட்டுகள் கோருவர்.
சட்டங்களுக்கு உட்பட்டு தொழில் தொடங்க மிக வேகமாக அனுமதி அளிப்பதும் தொழில் எவ்வித தடங்கலும் இல்லாமல் நடப்பதை உத்தரவாதப்படுத்துவதும் எவ்வித தவறும் இல்லை. அதனை மாநில அரசாங்கங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதில் மாற்று கருத்து இருக்க இயலாது. ஆனால் தொழிலாளர் சட்டங்களை சிதைப்பது/ இயற்கை வளங்களை கொள்ளை அடிக்கும் அனுமதி/ அபரிமித வரி சலுகைகள்/ சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகியவையும் தமது உரிமை என கார்ப்பரேட்டுகள் கோரினால் அதனை எப்படி அனுமதிக்க இயலும்?மோடி அரசாங்கம் முன்வைக்கும் இந்த நிபந்தனைகள் பொருத்தமற்றவை என்பது மட்டுமல்ல; மிகவும் கொடூரமானவை! கொள்ளை நோய் எனும் பேரிடர் காலத்தை பயன்படுத்திக் கொண்டு இவ்வாறு செயல்படுவது மிக மோசமான கந்து வட்டிக்காரனைவிட முரட்டுத்தனமாக நடந்து கொள்வதாகும்.

என்ன செய்யப் போகிறது எடப்பாடி அரசாங்கம்?
மோடி அரசாங்கத்தின் இந்த கேடுகெட்ட நிபந்தனைகள் தமிழகத்துக்கு கூடுதல் விரோதமானது என்பதை மறுக்க முடியாது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்/ அடித்தட்டு மக்களுக்கு விலை குறைவான மின்சாரம்/ இலவச அரிசி/ நியாய விலை கடைகளின் செயல்பாடுகள்/ நகரப்புற உள்ளாட்சிகளின் செயல்பாடுகள் ஆகியவை சீர்குலையும் ஆபத்து உருவாகியுள்ளது. மாநில மின்வாரியம் எனும் அமைப்பே இருக்குமா எனும் கேள்வியும் எழும்.விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் பாதிப்பு எனும் கவலை மிக ஆழமான அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இலவச மின்சாரம் இரத்து செய்ய மாட்டோம் என எடப்பாடி அரசாங்கம்  கூறும் நிலைக்கு நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் மத்திய அரசாங்கத்துக்கு ஆட்சேபணை கடிதம் எழுதி உள்ளார். எனினும் மோடி அரசாங்கம் தனது கார்ப்பரேட் ஆதரவு நிலையை அவ்வளவு எளிதில் மாற்றிக்கொள்ளாது. கூட்டுக்களவாணி முதலாளித்துவம் என்பது மோடி அரசாங்கத்தின் மரபணுவாக மாறி உள்ளது. வெறும் ஆட்சேபணை கடிதம் மட்டும் பலனை அளிக்காது. மோடி அரசை எதிர்ப்பதற்கு மக்கள் ஆதரவும் அசாத்திய அரசியல் தைரியமும் தேவை!

====அ.அன்வர் உசேன்===