1941 - நிரலால்(புரோக்ராம்) இயங்கிய, உலகின் முதல் தானியங்கி கணினியான இசட்3-யை, ஜெர்மானிய அறிவியலாளர் கொன்ராட் ஸ்யூஸ் மக்களிடையே செயல்படுத்திக்காட்டினார். நடைமுறையில் செயல்பட்ட உலகின் முதல் ‘ட்யூரிங் கம்ப்ளீட்’ கணினியும் இதுதான். கணினியின் (அக்காலத்தில் கணக்கிடும் எந்திரத்தின்!) முழுமைத் தன்மைக்கான விதிகளை நிறைவு செய்வது ‘ட்யூரிங் கம்ப்ளீட்’ என்றழைக்கப்படுகிறது. ‘ட்யூரிங் கம்ப்ளீட்னஸ்’, ‘ட்யூரிங் ஈக்விவேலன்ஸ்’, ‘யுனிவர்சலிட்டி’ ஆகிய கணினித் தரநிலைகள், ஆங்கிலேய கணினி அறிவியலாளர் ஆலன் ட்யூரிங் பெயரால் குறிப்பிடப்படுகின்றன. ‘ட்யூரிங் எந்திரத்தை’ 1936இல் உருவாக்கிய ட்யூரிங், அமெரிக்காவில் இதே காலகட்டத்தில் கணக்கீடுகளுக்கான விதிகளை உருவாக்கிய ஆலன்ஸோ சர்ச் ஆகியோரின் விதிகள் கூட்டாக, சர்ச்-ட்யூரிங் கோட்பாடு என்றழைக்கப்படுகின்றன. 1830களில் சார்லஸ் பாப்பேஜ் உருவாக்க முயற்சித்த வித்தியாசப்பொறி, அப்போது உருவாக்கப்பட்டிருந்தால் உலகின் முதல் ட்யூரிட் கம்ப்ளீட் கணினியாக இருந்திருக்கும் என்பது பின்னாளில் நிரூபிக்கப்பட்டது.
இந்த இசட்-3யை உருவாக்கிய ஸ்யூஸ், உண்மையில் கட்டிடக்கலை பயின்றவர். பெரிய கட்டிடங்களுக்கான வடிவமைப்பில் கடினமான சமன்பாடுகளின் மூலமான கணக்கீடுகளைச் செய்யவேண்டியிருந்ததால், அதற்கான ஓர் எந்திரத்தை வடிவமைக்க முயற்சித்ததில், கணினியை உருவாக்குபவராக மாறினார். அவர் முதலில் உருவாக்கியவை, சோதனை முயற்சி (வெர்சுச்மாடல்) என்பதைக் குறிக்க வி-1, வி-2 என்று பெயரிடப்பட்டாலும், இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி பயன்படுத்திய பேரழிவு ஏவுகணைகள் வி-1 என்று குறிப்பிடப்பட்டதால், ஸ்யூஸ் என்ற பெயரின் முதலெழுத்தைக்கொண்டு இசட்-3 என்று பெயரிட்டார். மின்சார ரிலே என்னும் 2,600 ஸ்விட்சுகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருந்த இந்தக் கணினி, 22 பிட் நீளங்கொண்ட சொற்களைப் பயன்படுத்தி, 5 ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கியது.
ஸ்யூஸ் தொடக்கத்திலிருந்தே இரும(பைனரி) எண் முறையைப் பயன்படுத்தியது, ரிலேக்களைப் பயன்படுத்துவதை எளிதாக்கியதுடன், அவரது வெற்றிக்கான காரணமாகவும் குறிப்பிடப்படுகிறது. இதற்கான நிரல்கள் துளையிடப்பட்ட செல்லுலாய்ட் ஃபிலிம் நாடாக்களில் (பிற்காலத்திய காந்தப்புல நாடா போன்று) கணினிக்கு வெளியில் சேமிக்கப்பட்டதால், அக்காலத்திய கணினிகளில், நிரலை மாற்ற கம்பி இணைப்புகளையே மாற்றும் சிக்கல் இதில் இல்லை. இதனை மேம்படுத்துவதற்கான அனுமதியை, போருக்கு அவசியமற்ற கருவி என்று ஜெர்மன் அரசு மறுத்துவிட்டாலும், 1945இல் உருவாக்கப்பட்ட இசட்-4, வணிக அடிப்படையில் உருவாக்கப்பட்ட உலகில் முதல் எண்ம(டிஜிட்டல்) கணினியாகியது.
- அறிவுக்கடல்