tamilnadu

img

கண்ணோட்டம் : பெரிய கஜானாவை திறந்துவிட ரஜினி குரல் கொடுப்பாரா?

திரைக்கலைஞர் ரஜினிகாந்த் அவ்வப்போது அசரீரி போல வாய்ஸ் கொடுப்பார். பல நேரங்களில் அவர் வெளியிடும் கருத்துக்கள் இது அவரது சொந்தக் குரல்தானா அல்லது வேறு யாராவது  ஒருவருடைய குரலில் பேசுகிறாரா என்ற சந்தேகத்தை எழுப்பும்.முன்பு ஒருமுறை போர் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று தன்னுடைய ரசிகர் மன்றத்தினரை ஆற்றுப்படுத்தினார். தற்போது உலக நாடுகளை ஆக்கிரமித்து இருக்கும் கொரோனா வைரஸ் தொற்று என்பது மூன்றாம் உலகப் போருக்கு நிகரானது எனப் பலரும் கூறும் நிலையில், மக்களைப் பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ஒருவேளை இதைவிட பெரிய போராக வரட்டும் என காத்திருக்கிறார் போலும்.

தற்போது ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார். ‘ இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால், மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து கஜானாவை நிரப்ப வேறு நல்ல வழிகளைப் பாருங்கள்’  என்று குறிப்பிட்டுள்ளார். இப்போது உள்ள சூழ்நிலையில், தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்ற அவரது கருத்து வரவேற்கத்தக்கது. இதில், யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பு இல்லை. 

ஆனால் அதேநேரத்தில், மத்திய அரசு மாநிலங்கள் விரும்பினால் மதுக்கடைகளை திறந்து கொள்ளலாம் என்று அறிவித்தபோதே, ரஜினிகாந்த் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசை கண்டித்திருக்க வேண்டாமா? ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிடுங்கள் என்று எச்சரித்திருக்க வேண்டாமா? என்ற கேள்வி எழுகிறது.

மத்திய அரசின் அனுமதியைத் தொடர்ந்து, தில்லியிலும் ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. 

44 நாட்களுக்கும் மேலாக மதுவை மறந்திருந்த சிலர் கூட அண்டை மாநிலங்களுக்கு படையெடுத்தனர்.

டாஸ்மாக் கடையை திறப்பதற்கு நேரம் பார்த்து காத்திருந்த தமிழக அதிமுக அரசு தமிழகத்திலும் மதுக்கடைகள் மே 7 ஆம் தேதி முதல்  செயல்படும் என அறிவித்தது. அதுவரை தனிமனித இடைவெளியை பின்பற்ற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு, மக்களும் அதை ஏற்று கடைப்பிடித்து வந்தநிலையில், ஒரே நாளில் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டது.

மதுக்கடை திறப்பதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், மதுக்கடை திறப்புக்கு தடைவிதிக்க மறுத்த உயர்நீதிமன்றம், ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை காட்டிய பின்பே மது விற்பனை செய்ய வேண்டும் என்பதோடு பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஆதார் அட்டை அவசியம் என்று அறிவித்த அதிமுக அரசு, மது வாங்க ஆதார் அட்டை கேட்பது அநீதி. பல மதுப்பிரியர்களிடம் ஆதார் அட்டை இல்லை. இதனால் அவர்களது ‘குடி’ உரிமை பாதிக்கப்படும் என நீதிமன்றத்தின் கதவைத் தட்டியுள்ளது.

இது அரசின் கொள்கை முடிவு. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தமிழக அரசு தனது ‘கொள்கைப் பிடிப்பை’ அழுத்தமாக தெரிவித்துள்ளதோடு, டாஸ்மாக் கடை மூடப்பட்டதால், மாநில அரசுக்கு பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் ஒப்புக் கொண்டுள்ளது. 

சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என தொடுக்கப்பட்ட வழக்குகளின் அடிப்படையில், மதுக்கடைகளை அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அதிமுக அரசு மின்னல் வேகத்தில் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது. இந்நிலையில்தான், ரஜினிகாந்த் தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

கஜானாவை நிரப்ப வேறு நல்ல வழி பாருங்கள் என்று புத்திமதி சொல்லும் அவர், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் கஜானாவை மத்திய அரசு காலி செய்திருப்பதை கண்டித்திருக்க வேண்டும் அல்லவா?

மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய ஜிஎஸ்டி பாக்கி ரூ.12 ஆயிரம் கோடியையும், திட்ட மானியம் ரூ.10 ஆயிரம் கோடியையும் உடனடியாக தர வேண்டும் என மத்திய அரசை ரஜினிகாந்த் வலியுறுத்தி இருக்க வேண்டும் அல்லவா? 

மாநில அரசுகள் நிதி திரட்டுவதை கெடுக்கும் வகையில் பிஎம்கேர்ஸ் என்ற பெயரில் தணிக்கைக்கு உட்படாத, வெளிப்படைத் தன்மையில்லாத, திட்டத்தை ரஜினிகாந்த் தட்டிக் கேட்டிருக்க வேண்டாமா? மாநில அரசுகள் திரட்டும் நிதிக்கும் வரிச் சலுகை வேண்டும் என்று கேட்டிருக்க வேண்டாமா? அல்லது பிஎம்கேர்ஸ் நிதியை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்று வலியுறுத்துவதன் மூலம் நல்ல வழியில் கஜானாவை மாநில அரசுகள் நிரப்ப ரஜினிகாந்த் உதவியிருக்க வேண்டாமா? 

மத்திய அரசு குறித்து எந்த விமர்சனமும் செய்யாமல், கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக இருப்பது சரிதானா? 

மது பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் காட்சிகள் அமையக் கூடாது என்பதில் எம்ஜிஆர் போன்ற கலைஞர்கள் கவனமாக இருந்தார்கள். இனிமேலாவது, ரஜினிகாந்தும் அந்த வழியை தனது திரைப்படங்களில் பின்பற்றுவார் என எதிர்பார்க்கலாம்.

====மதுக்கூர் இராமலிங்கம்====