tamilnadu

img

இந்நாள் ஆக. 15 இதற்கு முன்னால்

1281 - ‘காமிக்காஸே’(தெய்வீகக் காற்று) என்று ஜப்பானிய வரலாற்றில் குறிப்பிடப்படும் சூறாவளியில், ஜப்பானைத் தாக்கவந்த மங்கோலிய அரசன் குப்ளாய் கானின் சீனப் படைகளைச் சேர்ந்த சுமார் நான்காயிரம் கப்பல்களும், ஒரு லட்சம் வீரர்களும் மூழ்கி அழிந்தனர். 1231இலிருந்து பலமுறை படையெடுத்து, கொரியாவை திரை செலுத்தும் நாடாக்கியபின், ஜப்பானைக் கைப்பற்ற விரும்பிய குப்ளாய்-கான், 1274லும், 1281லும் ஜப்பான்மீது படையெடுத்தாலும், வெற்றிபெற முடியவில்லை. கைகளால் வீசும் வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்ட இந்தப் போர்கள், முன் நவீனப் போர்முறையின் தொடக்கமாக வரலாற்று முக்கியத்துவம் பெறுவதுடன், ஜப்பானிய வரலாற்றில், மங்கோலிய விரிவாக்கத்தைத் தடுத்துநிறுத்தி, நாடுகளின் எல்லைகளை வரையறுப்பதில் முக்கியமானவையாகவும் குறிப்பிடப்படுகின்றன.

1274இல் மேற்கொள்ளப்பட்ட முதல் படையெடுப்பில் 200க்கும் மேற்பட்ட கப்பல்கள் சூறாவளியில் அழிந்ததைத் தொடர்ந்து, குப்ளாய்-கானின் படைகள் தோல்வியுற்றுப் பின்வாங்கின. 1281இல் இரண்டாவது படையெடுப்பு, சுமார் நான்காயிரம் கப்பல்களில், ஒன்றரை லட்சம் மங்கோலிய, சீன, கொரிய வீரர்கள் பங்கேற்ற, உலக வரலாற்றின் மிகப்பெரிய படையெடுப்பு என்றும், இரண்டாம் உலகப்போரில் பிரான்சை விடுவிக்க சுமார் மூன்றரை லட்சம் நேச நாட்டுப் படைவீரர்கள் நார்மண்டியில் நுழைந்ததுதான் இதைவிடப் பெரியதாகவும் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அக்காலத்தில் வீரர்களின் எண்ணிக்கை கூடுதலாகக் குறிப்பிடப்பட்டுவிட்டதாகவும் சில தற்கால வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள்.

சூறாவளியில் கப்பல்கள் அழிந்ததைத் தொடர்ந்து, சுமார் எழுபதாயிரம் வீரர்களை ஜப்பான் கைது செய்ததுடன், ஜப்பானைக் காப்பதற்காகவே வீசிய தெய்வீகக் காற்று என்றும் கொண்டாடியது. அதன்பின் பெரிய முக்கியத்துவம்பெறாத இந்த நிகழ்வை, இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் பயன்படுத்திக்கொண்டது. நேச நாட்டுப் படைகளின் கை ஓங்கத் தொடங்கிய நிலையில், அவர்களின் கப்பல்கள்மீது, இதே ‘காமிக்காஸே’ என்ற பெயரில், ஜப்பானிய விமானிகளை விமானத்துடன் விழுந்து வெடிக்கச்செய்யும் தற்கொலைப் படையாக்கியது ஜப்பான்.

பேரரசரும் நாடும் வேறுவேறல்ல என்றும், தாய்நாட்டிற்காக உயிரிழப்பது தெய்வீகம் என்றும் நம்பச்செய்யப்பட்டிருந்த ஜப்பானிய வீரர்கள், திரும்பிவருவதற்கு எரிபொருளில்லாமல் விமானத்தில் அனுப்பப்பட்டு தற்கொலைப் படையாகப் பயன்படுத்தப்பட்டனர். அணுக்குண்டு தாக்குதலால் ஜப்பான் சரணடைவதற்குமுன் ,பசிபிக் பகுதியில் நேசநாட்டுப் படைகளுக்கு முட்டுக்கட்டைபோடும் முயற்சியில், 1,300க்கும் அதிகமான விமானங்களில், 3,800க்கும் அதிகமான ஜப்பானிய விமானிகள் இவ்வாறு தாக்குதல் நடத்தி உயிரிழந்தனர்.