ஸ்ரீநகர்:
2019 ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஜம்மு- காஷ்மீரின் மாநில அந்தஸ்தும், அந்த மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு உரிமைகளும் ரத்து செய்யப்பட்டன. அத்துடன் மாநிலமானது, ‘ஜம்மு - காஷ்மீர்’ மற்றும் ‘லடாக்’ என இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது.
இந்நிலையில், ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின், ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையான நான்கு மாதங்களில் காஷ்மீருக்கு சுற்றுலாபயணிகள் வருகை 80 சதவிகிதத்துக்கு அதிகமாகக் குறைந்து விட்டதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையான 4 மாத காலத்தில் சுமார் 32 ஆயிரம் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள், ஜம்மு - காஷ்மீருக்கு வருகை புரிந்துள்ளனர். ஆனால், கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், இதே 4 மாத காலத்தில், 2 லட்சத்து49 ஆயிரம் பேர் காஷ்மீருக்கு சுற்றுலா வந்துள்ளனர். இது 87 சதவிகித வீழ்ச்சியாகும்.வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையும் இந்த மாதங்களில் 82 சதவிகிதம் குறைந்து போயிருக்கிறது. ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை 3 ஆயிரத்து 413 வெளிநாட்டுப் பயணிகள் மட்டுமே வந்துள்ளனர். இதுவே கடந்த ஆண்டில் 19 ஆயிரத்து 167 பேர்களாக இருந்துள்ளது.இந்த நான்கு மாதங்களிலும், நவம்பர் மாதத்தில்தான் அதிகபட்சமாக 10 ஆயிரத்து 946 உள்நாட்டுப் பயணிகளும் 1,140 வெளிநாட்டுப் பயணிகளும் காஷ்மீருக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
அதற்கு முன்னதாக ஜூன் மாதத்தில் 1 லட்சத்து 62 ஆயிரம் உள்நாட்டுப் பயணிகளும், ஜூலை மாதத்தில் 1 லட்சத்து 49 ஆயிரம் உள்நாட்டுப் பயணிகளும் காஷ்மீர் வந்துள்ளனர். இது, முந்தைய ஆண்டின் இதே மாதங்களில் காணப்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகையைவிட சுமார் 27 சதவிகிதம் அதிகம். ஆனால், ஆகஸ்டில் சிறப்பு அந்தஸ்துநீக்கப்பட்டதும் இந்த முன்னேற்றம் தலைகீழாகி இருக்கிறது.