tamilnadu

img

ரூ. 18,000 கோடி நஷ்டம்; 1 லட்சம் பேர் வேலை இழப்பு... காஷ்மீரைக் குலைத்துப் போட்ட மோடி அரசு!

ஸ்ரீநகர்:
சட்டப்பிரிவு 370 ரத்து, மாநில அந்தஸ்து பறிப்பு, மோடி அரசின் அடக்குமுறை, தொடர்ச்சியான நான்கு மாத கால ஊரடங்கு உத்தரவு ஆகியவற்றால், காஷ்மீர் பொருளாதாரம் ரூ. 17 ஆயிரத்து 878 கோடி அளவுக்கு இழப்பைச் சந்தித்து இருப்பதாக காஷ்மீர் வர்த்தக சங்கம் புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.2019 ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்குப் பிந்தைய காலத்தில், காஷ்மீரில் ஏற்பட்ட இழப்புகள் குறித்த விரிவான துறை வாரியான அறிக்கையை வெளியிட்ட காஷ்மீர் வர்த்தக மற்றும் கைத்தொழில் சபை (KCCI) 2017-18 ஆம் ஆண்டிற்கான ஜம்மு-காஷ்மீரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் இழப்புக்களை மதிப்பிட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் மொத்த மக்கள்தொகையில் 55 சதவிகிதத்தை உள்ளடக்கிய காஷ்மீர் பள்ளத்தாக்கின் 10 மாவட்டங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், கடந்த 120 நாட்களில் காஷ்மீரின் பொருளாதாரம் ரூ. 17 ஆயிரத்து 878 கோடியே 18 லட்சம் இழப்பை சந்தித்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.ஒவ்வொரு துறையிலும் தொழிற்சாலைகள் வைத்திருப்பவர்கள் மற்றும் தனி நபர்களின் உண்மையான எண்ணிக்கை, வேலை மற்றும் நிதி இழப்புகள் ஆகியவற்றின் அடிப்படையிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.உதாரணமாக, சுற்றுலாத்துறை அதன் பல்வேறு துணைத் துறைகளான டூர் ஆபரேட்டர்கள், படகு வீடுகள், ஹோட்டல்கள், சுற்றுலா போக்குவரத்து, ஷிகாராக்கள், சாகச விளையாட்டு மற்றும் பிற தொடர்புடைய துறைகளாக பிரிக்கப்பட்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதேபோல் போனி வல்லாக்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் வழிகாட்டிகள் சந்தித்த இழப்புகளும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.  இதில், லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.நிதி நிறுவனங்களில் கடன் வாங்குபவர்கள், அவர்களின் கடன்களை திரும்ப அடைப்பதற்கான திறனை இழந்துள்ளனர். கணிசமான எண்ணிக்கையிலான தொழில் நிறுவனங்கள் திவாலாகி உள்ளன. பல வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. சில நிறுவனங்கள் முடப்படும் நிலையில் உள்ளன. தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஈ-காமர்ஸ் போன்ற இணையத்தை நேரடியாக சார்ந்திருக்கும் துறைகள் பாழாகி இருக்கின்றன.ஆப்பிள் வாங்குவதற்காக ரூ. 8 ஆயிரம் கோடிஒதுக்கப்பட்ட தோட்டக்கலைத் துறையில் அரசாங்கத்தின் தலையீடு காரணமாக பீதி ஏற்பட்டு விற்பனையில் இழப்பு ஏற்பட்டுள்ளது. கைவினைக் கலைஞர்களும் நெசவாளர்களும் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். இந்தத் துறைகளில் ரூ. 2 ஆயிரத்து 520 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், உற்பத்தி மோசமாக உள்ளது என்று வர்த்தக சங்கம் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.