ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு உரிமைகளை வழங்கும் 370, 35ஏ சட்டப்பிரிவுகளை, கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி திடீரென ரத்து செய்த மோடி அரசு, இதற்கு எதிராக போராட்டங்கள் எழுந்துவிடாதவாறு, அரசியல் கட்சித்தலைவர்களை சாமர்த்தியமாக வீட்டுச்சிறையில் அடைத்து விட்டது.இதனால், ஆங்காங்கே பொதுமக்கள் தன்னெழுச்சியாக நடத்திய போராட்டங்கள் தவிர, கடந்த 2 மாதங்களாக அரசியல் கட்சிகளின் பெயரால் வேறு போராட்டங்கள் எதுவும் 370 ரத்துக்கு எதிராக நடைபெறவில்லை.தற்போது, வீட்டுச்சிறை வைக்கப்பட்டவர்கள் படிப்படியாக விடுதலை செய்யப்பட்டு வரும் நிலையில், அவ்வாறு விடுதலை செய்யப்பட்ட, காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் சகோதரி சுரையா, மகள் சபியா ஆகியோர், கையில் கறுப்புத் துணி கட்டி, செவ்வாயன்று காஷ்மீர் மாநில சட்டப்பேரவையின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏராளமான பெண்களும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரையும் காஷ்மீர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.