திருநெல்வேலி:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் அன்பரசி(21). இவர் மறைந்த மக்கள் பாடகர் திருவுடையானின் மகளாவார். இவர் நெல்லை மாவட்டம் மானூரில் உள்ள தபால் நிலையத்தில் தபால் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் வியாழக்கிழமை காலை 10 மணியளவில் அழகியபாண்டியபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார். உடனடியாக இவரது உடல் உடற்கூராய்வுக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து அவரது சொந்த ஊரான சங்கரன்கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
மறைந்த அன்பரசி உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ். வெங்கட்டராமன், எழுத்தாளர் ச.தமிழ்ச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நெல்லை மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், தென்காசி மாவட்டச் செயலாளர் உ.முத்துப்பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீராம், வேல்முருகன், உச்சிமாகாளி, சங்கரன்கோவில் தாலுகா செயலாளர் அசோக்ராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் பாலுச்சாமி, தமுஎகச மாநிலத் தலைவர்கள் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.மறைந்த அன்பரசியின் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருநெல் வேலி, தென்காசி மாவட்ட குழுக்கள் ஆழ்ந்தஇரங்கலை தெரிவித்துள்ளன.