tamilnadu

img

காஷ்மீரில் காணாமல் போன 4 ஆயிரம் பேர்?

ஸ்ரீநகர்:
ஜம்மு - காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து மற்றும் சிறப்பு உரிமைகள் ரத்து செய்யப்பட்ட பின்னணியில், அங்கு4 ஆயிரம் பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை என்றும், இதுவரை 252 ஆட்கொணர்வு மனுக்கள் (Habeas corpus) தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

மத்திய பாஜக அரசானது, கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி, ஜம்மு - காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தைப் பறித்ததுடன், சட்டப்பிரிவு 370 அடிப்படையிலான சிறப்பு உரிமைகளை ரத்து செய்தது.முன்னதாக, மாநிலம் முழுவதும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினரை இறங்கிய மத்திய அரசு,முன்னாள் முதல்வர்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் உட்பட ஒட்டுமொத்த மக்களையும் வீட்டுச்சிறை வைத்தது. தொலைத் தொடர்பு வசதிகளைத் துண்டித்தது. இதற்கு எதிராக, காஷ்மீரிகள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்களில் சுமார் 4 ஆயிரம் பேரைக் கைது செய்தது. இவர்களைஅடைப்பதற்கு ஜம்மு - காஷ்மீர் சிறைகளில் இடமில்லாத நிலையில், நூற்றுக் கணக்கானவர்களை உத்தரப்பிரதேச மாநிலச் சிறைகளுக்கு கொண்டு சென்றது.

எனினும், கைது செய்யப்பட்டவர்களின் விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை. அவர்கள் எந்தச் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்; கைதானவர்களின் தற்போதைய நிலைமை என்ன?என்பன போன்ற தகவல்கள் உறவினர் களுக்கு கூட தெரிவிக்கப்படவில்லை.தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜம்மு - காஷ்மீர் மாநிலச் செயலாளர் முகம்மது யூசுப் தாரிகாமி ஆகியோரைப் பற்றிய தகவல்கள் கூட, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்களுக்குப் பிறகே தெரியவந்தது.இதில் பரூக் அப்துல்லா, எந்த கேள்வியும் இல்லாமல் ஒருவரை 2 ஆண்டுகள் வரை சிறையில் வைத்திருப்பதற்கு வகைசெய்யும் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பதும் வெளிச்சத்திற்கு வந்தது. இவ்வாறு ஜம்மு - காஷ்மீர் பொதுப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 290 பேர்முதல் 4 ஆயிரம் பேர் வரை கைது செய்யப்பட்டிருப்பதாகவும் ஒரு கணக்கு வெளியானது.

இந்நிலையில், சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட நாளிலிருந்து செப்டம்பர் 19 வரை, காணாமல் போனவர்களை கண்டுபிடித்துத் தருமாறு, ஸ்ரீநகரில் உள்ள ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில், 252 ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்குப் பிறகு, நாளொன்றுக்கு 6 என்ற மனுக்கள் விகிதம் இந்த மனுக்கள்தாக்கல் செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில், நூற்றுக்கணக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட் கொணர்வு மனுக்களை விசாரிக்கும் பணியில், ஸ்ரீநகர் நீதிமன்றம் தற்போது தீவிரக் கவனம் செலுத்தத் துவங்கியுள்ளது. இதுவரை 85 மனுக்கள் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு உள்ளன. 150 மனுக்கள் சேர்க்கைக் கட்டத்தில் உள்ளன.20 வழக்குகளில் இன்னும் முடிவெடுக் கப்படவில்லை.