tamilnadu

img

குமரி சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடின

நாகர்கோவில், மார்ச் 16- உலக நாடுகளையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியாவிலும் வைரஸ்  பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் தில்லியில் ஒருவர், கர்நாடகாவில் ஒருவர் என இருவர் இறந்துள்ளனர். இந்நிலையில் மாநில அரசுகள் இதனை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.  குமரி மாவட்டத்தில் சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரி பகுதியில் சுற்றுலா பயணிகளின் வருகை முற்றிலும் குறைந்துவிட்டது. கேரளா அரசின் கட்டுப் பாட்டிலுள்ள பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா  பயணிகளுக்கு தடை காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குமரி-கேரள எல்லைப் பகுதிகளான களியக்காவிளை, மார்த்தாண்டம், குழித்துறை போன்ற பகுதிகளில் செயல்படும் திரையரங்குகளும் தமிழக அரசின் உத்தரவுப்படி மூடப்பட்டுள்ளன. அதே போல கோவில்கள் மற்றும் பொது இடங்களில் பொதுமக்களின் வருகை வெகுவாக குறைந்துள்ளது. குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து  தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து உல்லாசமாக குளித்து மகிழ்ந்து செல்வது  வழக்கம். கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் திங்கள்கிழமை முதல் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளது.