tamilnadu

img

வேளாண் மண்டல பாதுகாப்பு அதிமுக அரசின் நாடகம்

 கே.பாலகிருஷ்ணன் பேட்டி

சென்னை.பிப்,18- காவிரி வேளாண் மண்டலம் பாதுகாக்கப்படும் என்று அதிமுக அரசு கூறுவது வெறும்கண்துடைப்பு நாடகம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் தோழர் ம.சிங்கார வேலரின் 161வது பிறந்தநாளை யொட்டி செவ்வாயன்று (பிப்18) சென்னை  மாவட்டஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு  கே.பாலகிருஷ்ணன் மாலை அணி வித்து வீரவணக்கம் செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,  பொதுவுடைமை சமுதாயம் உருவாக்க போராடிய சிங்காரவேலர் இந்தியாவிலேயே முதன்முதலில் மேதினம் கொண்டாடியவர். ஒடுக்கப்பட்ட, தலித் மற்றும் பழங்குடிமக்களுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர். 1925ல் நடைபெற்ற  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தலைமை தாங்கிய பெருமைக்கு சொந்தக்காரர். இந்தியா முழுவதும் சமதர்மம் , பகுத்தறிவு, அறிவியல் சிந்தனை பரவ முழுமூச்சோடு செயல்பட்டவர், சாதி ஒழிப்பு, மூடப்பழக்கவழக்கங்களை எதிர்த்து போராடுவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அவர் எந்த லட்சியத்திற்காக வாழ்ந்தாரோ அதனை இடதுசாரிகள் முன்னெடுத்து செல்வார்கள். தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாடத்திட்டத்தில் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் வாழ்க்கை வரலாற்றை பாடமாக சொல்லித்தர வேண்டும் என்றார். பின்னர் செய்தியாளர்கள் கேள்வி களுக்கு பதிலளித்த கே.பால கிருஷ்ணன் தங்கள் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலான சிஏஏ, என்ஆர்சியை  அதிமுக அரசு  தூக்கி சுமந்து ஆதரித்து வருகிறது. பாஜகவின் நெருங்கிய கூட்டாளியாக அதிமுக மாறிவிட்டது. மத்திய அரசின் குடியுரிமை நாசகர திட்டத்தை கேரளா, பாண்டிச்சேரியை அடுத்து தெலுங்கானா சட்டமன்றத்தில் எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  பாஜக ஆளும் இமாச்சலப்பிரதேசத்திலேயே சிஏஏ, என்ஆர்சிக்கு எதிர்ப்பு தெரி வித்துள்ளனர்.

தேர்வாணைய முறைகேடு

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகளுக்கு அரசு தான் காரணம், இதுகுறித்து சிபிஐ விசாரணை செய்யவேண்டும், பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டல அறிவிப்பு என்பது  மீத்தேன்,  ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு  இயக்கம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சி களுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறோம். ஏற்கனவே 240க்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகள் தோண்ட கொடுக்கப்பட்ட அனுமதி யை ரத்து செய்யவேண்டும். நாடாளு மன்றத்தில் இதுகுறித்து   கேள்வி எழுப்பும் போது மத்திய அரசு வாய்திறக்க மறுக்கிறது. இதற்கு அதிமுக அரசு என்ன செய்யப் போகிறது?

அனுமதியை ரத்து செய்யாமல் வேளாண் மண்டலத்தை மாநில அரசு  எப்படி பாதுகாக்கும். இது மக்களை ஏமாற்றும் அறிவிப்பாகும், மீத்தேன் எரிவாயு, ஹைட்ரோகார்பன் ரசாயனம் எடுக்க அனுமதி மறுப்பை சட்டமாக நிறைவேற்றி ஆழ்குழாய் கிணறுகளை மூடவேண்டும்.   தமிழ்நாடு சட்டமன்றத்தில் வேளாண் மண்டலத்தை பாதுகாக்க முதலமைச்சர் எடப்பாடி சட்டம் நிறைவேற்றுவாரா என்று கேள்வி எழுப்பினார். குடி யுரிமை திருத்தச்சட்டத்தையே எதிர்த்து தீர்மானம் போட திராணி யில்லாதவர்கள் வேதாந்தா குழுவை  எதிர்த்து சட்டம் போடுவார்களா? வேளாண் பாதுகாப்பு மண்டல அறிவிப்பு மக்களின் கட்டாயத்திற்காக ஏற்றுக்கொள்ளப்பட்டதே தவிர இது முழுவதுமாக நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை எங்களிடம் இல்லை. 

பள்ளிக்குழந்தைகளுக்கு முட்டை தரப்பட வேண்டும்

அட்சயபாத்திரா என்ற ஹரே கிருஷ்ணா இயக்கம் சார்பில் அரசு பள்ளி குழந்தைகளுக்கு கொண்டுவரப்படும்  காலை உணவு திட்டத்தில் பூண்டு, வெங்காயம், முட்டை வழங்க மாட்டோம் என்பதை ஏற்கமுடியாது. அதிமுக அரசு மத அடிப்படையிலான தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் விடுவதாக தகவல் வருகிறது. தமிழ்நாட்டு மாணவர்கள் ஒன்றும் சோத்துக்கு அலைபவர்கள் அல்ல, அதிமுக அரசு பாஜகவின் பினாமியாக செயல்படுவது கண்டனத்திற்கு உரியது என்றார். இந்த நிகழ்வில் மத்திய சென்னைமாவட்டச்செயலாளர் ஜி.செல்வா, இரா.முரளி, சி.திரு வேட்டை, ஏ.ஜி.காசிநாதன், எம்.வி.கிருஷ்ணன், புலவர் வீரமணி, வீரஅருண், கிருஷ்ணமூர்த்தி ஆகி யோர் பங்கேற்றனர்