districts

img

தமிழகத்தை போல் வலுவான கூட்டணி இல்லாததால் பாஜக வெற்றி வடமாநில தேர்தல் குறித்து கே.பாலகிருஷ்ணன் பேட்டி

செங்கல்பட்டு,மார்ச் 10- மதவெறி பாஜகவை வீழ்த்த தமிழகத்தை போல வடமாநிலங்களில் எதிர்கட்சிகள் பலமான கூட்டணியை அமைக்காததால் பாஜக வெற்றி பெற்றுள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முப்பெரும் விழா வியாழனன்று (மார்ச்10) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக  பங்கேற்ற மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, வடமாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக  பெரிய வெற்றியை பெறவில்லை, பஞ்சாப் மாநிலத்தில்  காங்கிரஸிடமிருந்து ஆம் ஆத்மி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மேலும் பாஜகவை வீழ்த்த தமிழகத்தை போல வட மாநிலங்களிலும்  காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலமான கூட்டணியை அமைக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது.  பாஜக பல தொகுதிகளில் குறைந்த வாக்குகளிலேயே வெற்றி பெற்றுள்ளது, பாஜகவின் அதிருப்தி வாக்குகளை எதிரணியினர் ஒன்று சேர்க்க தவறி விட்டனர். இதனால் வாக்குகள் சிதறி விட்டது. இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை தவிர வேறு எதையும் பெரிதாக செய்யவில்லை என கூறினார். உத்தரபிரதேசத்தில் தொடர்ந்து 2வது முறையாக பாஜக ஆட்சியை பிடித்துள்ளது,  2024இல் தமிழகத்திலும் ஆட்சியை பிடிப்போம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து  பகற்கனவாகத்தான் முடியும். ஏற்கனவே பல மாநிலங்களில் நடந்த தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்ததை நாடு பார்த்தது. தோற்ற இடங்களில் எல்லாம் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி தான் பாஜக ஆட்சிக்கு வந்ததேயொழிய வெற்றி பெற்று ஆட்சிக்கு வரவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். ஒரு மாநிலத்தில் ஒரு கட்சி தோற்பதும் மற்றொரு கட்சி வெற்றி பெறுவதும் சூழ்நிலையை பொருத்து உள்ளதாகவும், இதனால் பாஜகவிற்கு ஏகோபித்த ஆதரவு உள்ளது என்கிற முடிவுக்கு எல்லாம் வந்துவிட முடியாது எனவும் பாலகிருஷ்ணன் கூறினார். பேட்டியின் போது கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன், மாநில குழு உறுப்பினர் இ.சங்கர் மாவட்ட செயலாளர் ப.சு.பாரதி அண்ணா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.