தமிழக மாணவர் இயக்கத்தை தோற்றுவித்தவர், விடுதலைப் போராட்ட வீரர், கம்யூனிச இயக்கத்தின் முதுபெரும் தலைவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய 32 மகத்தான தலைவர்களில் ஒருவர் என பன்முகத்தன்மை கொண்ட ஆளுமை. தமிழக வரலாற்றின் முகமாக உள்ள தோழர் என்.சங்கரய்யாவுக்கு இன்று (ஜூலை 15) 98வது பிறந்தநாள். இதையொட்டி அவர் விடுத்துள்ள செய்தியில், “இந்தியாவினுடைய சுதந்திரத்தை பலப்படுத்தக்கூடிய வகையில் மக்களும், இளைஞர்களும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்” என அறைகூவல் விடுத்திருக்கிறார்.
மேலும் அவர் கூறியிருப்பதாவது: “நாட்டின் ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும். பன்முகப்பட்ட கலச்சாரம், மொழிகளைக் கொண்ட நாடு இந்தியா என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும். இந்தியா ஒரு நாடாளுமன்ற ஜனநாயக குடியரசாக செயல்படுவதை உத்தரவாதப்படுத்த அனைவரும் முன்முயற்சி எடுக்க வேண்டும். மாநிலங்களின் சுயாட்சி பாதுகாக்கப்பட வேண்டும். பலமான மத்திய அரசு, அதிக அதிகாரம் கொண்ட மாநில அரசுகள் என்ற கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநாட்ட மக்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.
இந்திய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் உயர்த்துவதற்கும், இன்றைக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய சிரமங்களை அகற்றுவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்கு தொழிலாளி வர்க்கம், விவசாயிகள், மத்திய தர வர்க்கம், ஆசிரியர்கள், படிப்பாளிகள், பெண்கள், மாணவர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டும். சுதந்திரம் படைத்த இந்தியாவை, நாடாளுமன்ற ஜனநாயகமிக்க முற்போக்கு குடியரசாக, அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாத்து முன்னேற அனைத்து தரப்பு மக்களும் உழைக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் சாதி ஆணவக் கொலைகளை தடுக்க அனைத்து தரப்பு மக்களும் ஒன்றுபட வேண்டும். “மக்கள் அனைவரும் ஓர்குலம்” என்கிற பாரதியாரின் வரிகளை நெஞ்சில் தாங்கி சாதிய ஆணவக் கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும். மக்கள் சுயமரியாதையுடன் வாழ வேண்டும். பெண்கள் உரிமை பாதுகாக்க வேண்டும். பெண்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களை திருமணம் செய்து கொள்ள பாதுகாப்பை மக்களும், சட்டமும் ஏற்படுத்தி தர வேண்டும். குழந்தைகள் நலனையும், மூத்த குடிமக்கள்நலனையும் சேர்த்து பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் நாடு பலம் பொருந்தியதாக இருக்கும். இவ்வாறு என்.சங்கரய்யா கூறியுள்ளார்.