tamilnadu

img

தொழிலாளர் வர்க்கத்திற்காக வாழ்வை அர்ப்பணித்த முதுபெரும் தலைவர் தோழர் எஸ்.மன்னார்சாமி காலமானார்.... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்....

சென்னை:
அரசு போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும், போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காக தமிழக அளவில் பல்வேறு போராட்டங்களுக்கு தலைமையேற்றவரும், போக்குவரத்துத் தொழிலாளர்களின் ‘‘வழக்கறிஞர்’’ என போற்றப்பட்டவருமான (தோழர் எஸ்.எம்) எஸ்.மன்னார்சாமி வியாழன் இரவு 9.45 மணியளவில் மதுரை வடக்குமாசி வீதியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 95. 

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள செய்தி வருமாறு:

தொழிலாளி வர்க்கத்திற்காக தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த மகத்தான தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த முன்னோடிகளில் ஒருவருமான தோழர் எஸ். மன்னார்சாமி (95) வயது மூப்பின் காரணமாக வியாழன் இரவு காலமானார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலையும், செவ்வஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறது.
போக்குவரத்துத் தொழிலாளிமதுரையில் தொழிலாளி வர்க்க குடும்பத்தில் பிறந்த தோழர் எஸ். மன்னார்சாமி தனியார் போக்குவரத்து நிர்வாகத்தினரால் பழிவாங்கப்பட்டு முழுநேர ஊழியரானார். மதுரை மோட்டார் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராக செயல்பட்டார். தோழர்கள் கே.டி.கே. தங்கமணி, ஏ. பாலசுப்பிரமணியம், தண்டபாணி, வி.பி.சிந்தன், எஸ்.ஏ. பெருமாள் போன்ற கம்யூனிஸ்ட் இயக்க மூத்த முன்னோடிகளுடன் இணைந்து பணியாற்றியவர். 1952ல் சென்னை மாகாண முதல் சட்டமன்ற தேர்தலில் தோழர் பி.ராமமூர்த்தி சிறையில் இருந்தவாறே மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட்ட போது அவரது வெற்றிக்கு பாடுபட்டவர்.1975ம் ஆண்டு அவசரநிலைக் கால கட்டத்தில் கட்சித் தலைவர்களுடன் கைது செய்யப்பட்டு 8 மாத காலம் சிறையில்  அடைக்கப்பட்டார். இந்தி மொழியை கட்டாயமொழியாக்க முயன்ற போது அதனை எதிர்த்து கட்சியின் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டு 15 நாள் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிஐடியு சங்கம்...
போக்குவரத்து சங்கத்தில் பொறுப்பாளராக தேர்வு செய்யப்பட்டு தொழிற் சங்கத்தை புரட்சிகர பாதையில் கொண்டும் செல்லும் முயற்சியில் ஈடுபட்டவர். அப்போது டி.வி.எஸ் டிரான்ஸ்போர்ட் அரசுடமையாக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் நேரடியாகச் சென்று தொழிலாளர்களை ஒன்று சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சிஐடியு சங்கத்தில் இணைந்தனர்.போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சட்டபடியான உரிமைகள், அனைத்து பணிமனைகளிலும் ஒரேமாதிரியான ஊதியம், தொழிலாளர்களுக்கு பென்சன் போன்ற கோரிக்கைகளுக்காக மாநிலம் முழுவதும் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி போராடி அதில் வெற்றியும் கண்டவர்.  தொழிலாளர் நல சட்ட நுணுக்கங்களை மிகவும் ஆழமாக தெரிந்த அவர் தொழிலாளர்களுக்காக பல்வேறு வழக்குகள் நடத்தி அதில் வெற்றி பெற்றுத் தந்தவர்.மேலும்,  தனது அளவற்ற அனுபவங்களை, இளம் தோழர்களுக்கும் கற்றுத்தந்துள்ளார்.

கட்சியில் சேர்ந்து கடும் அடக்குமுறைகளை, சிறைவாசத்தை அனுபவித்த போதும், மனம் தளராமல், தொழிலாளர்களுக்காகவே தன்னுடைய வாழ்நாள் முழுவதும் உழைத்துக் கொண்டிருந்தவர் தோழர் எஸ்.மன்னார்சாமி. அவரது மறைவு தொழிலாளர் வர்க்கத்திற்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பேரிழப்பாகும். அவருக்கு கட்சியின் மாநில செயற்குழு தனது வீர வணக்கத்தையும், செவ்வஞ்சலியையும் செலுத்துகிறது.அவரது மறைவால் துயருற்றுள்ள அவரது மூத்த மகள் செல்வி, மருமகன் தோழர் ஜி. வேலுச்சாமி, இளைய மகள் கண்மணி, மகன் ஜெகநாதன் மற்றும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், கட்சித் தோழர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆறுதலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைவர்கள் அஞ்சலி
தோழர் மன்னார்சாமியின் உடலுக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன்,கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் மா.கணேசன், அ.ரமேஷ், வை.ஸ்டாலின், இரா.தெய்வராஜ், இரா.லெனின், சிஐடியு நிர்வாகிகள் வி.சிவனாண்டி, வாசுதேவன், சி.சுப்பையா, சந்தியாகு, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் கோபிநாத், அரசுப் போக்குவரத்து மதுரை தொழிலாளர்சங்கத் தலைவர் அழகர்சாமி, மாநில சம்மேளன நிர்வாகி வீ.பிச்சை மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்கள், சிஐடியு உள்ளிட்ட பல்வேறு வெகுஜன அமைப்புகளின் நிர்வாகிகள், தலைவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இரங்கல்
தோழர் மன்னார்சாமியின் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல்தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் அ.சவுந்தரராசன், மதுக்கூர் இராமலிங்கம், க.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஏ.பெருமாள், தீக்கதிர் ஆசிரியர் குழு ஆலோசகர் வி.பரமேசுவரன், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், சிஐடியு அகில இந்திய செயலாளர் ஆர்.கருமலையான், அரசுப் போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்க துணைத் தலைவர் ஜி.ராஜேந்திரன், பொதுச் செயலாளர் கனகசுந்தர், போக்குவரத்துத் தொழிலாளர் ஓய்வு பெற்றோர் அமைப்பின்மாநில நிர்வாகி ஆர்.தேவராஜன் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இறுதி நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை பகல் 12 மணிக்கு மதுரையில் நடந்தது