tamilnadu

img

24 மணி நேர காத்திருப்பு போராட்டம்

குடியுரிமை பாதுகாப்பு மாநாடு அறைகூவல்

சென்னை, பிப். 26 - குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) கைவிடவும், தேசிய குடிமக்கள் பதிவேடு (என்பிஆர்)ஐ நடைமுறைப் படுத்தக்கூடாது என வலியுறுத்தியும் கோட்டை முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்று தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அறிவித்துள்ளது. சென்னையில் புதனன்று (பிப்.26) தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இந்தமாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். சிஏஏவுக்கு எதிராக தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். கேரளா, புதுவையை பின்பற்றி, தமிழர்களின் குடியுரிமையை கேள்விக்குள்ளாக்கும் என்பிஆர்-ஐ தமிழகத்தில் அமுலாக்கக் கூடாது. என்பிஆரின் நீட்சியான தேசிய குடியுரிமை பதிவேட்டை (என்ஆர்சி)யை ஒருபோதும் ஏற்கமாட்டோம் எனும் கொள்கை முடிவையும் எடுக்க வேண்டும்.

சிஏஏ-வுக்கு எதிராக தில்லி ஷாஹின்பாக் போன்று வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும் (சென்னை ஷாஹின்பாக்) போராட்டத்தின் நோக்கம் நிறைவேறும் வரை அவர்களோடு மக்கள் மேடை உறுதுணையாக இருக்கும்.மல்லியில் வன்முறை, வெறியாட்டத்தில் இறங்கியுள்ள சங்பரிவாரங்கள் மீதும், காவல்துறையினர் மீதும் ஆட்சியாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மக்களை திசைதிருப்பும் நடவடிக்கைகளை கைவிட்டு வாழ்வாதாரப் பிரச்னைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
 

ஒத்துழையாமை இயக்கம்

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நடத்திய கையெழுத்து இயக்கத்தில் 2 கோடிப் பேர் கையெழுத்திட்டுள்ளனர். மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு சிஏஏ-வை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும், என்பிஆரை மாநில அரசு அமுல்படுத்தக் கூடாது. இதையும் மீறி அரசு செயல்படுத்தினால் விவரங்களை தராமல் மக்கள் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்த வேண்டும்.

சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி-யை எதிர்த்து மார்ச் மாதம் 3வது வாரத்தில் 24 மணி நேர தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறும். காலை 10 மணிக்கு துவங்கும் அந்தப் போராட்டம் மறுநாள் காலை 10 மணிக்கு முடியும். சென்னையில் கோட்டை முன்பும், இதர ஊர்களில் மத்திய அல்லது மாநில அரசு அலுவலகம் முன்பும் காத்திருப்பு போராட்டம் நடைபெறும். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருணன் தலைமையில், மாநில ஒருங்கிணைப்பாளர் க.உதயகுமார் வரவேற்க திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின், புதுச்சேரி முதலமைச்சர் வே. நாராயணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,  பத்திரிகையாளர் என்.ராம், சமயத் தலைவர்கள் பாலபிரஜாபதி அடிகளார், மௌலானா ஹாஜாமொய்தீன் பாகவி, பேராயர் தேவசகாயம்,நவாஸ்கனி எம்.பி., உள்ளிட்டோர் பேசினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் பி. சம்பத், காங்கிரஸ் தலைவர் கோபண்ணா, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு, கிறிஸ்துவ மக்கள் முன்னணி தலைவர் இனிகோ இருதயராஜ், கல்வியாளர் தாவூத் மியாகான், இமாம் மன்சூர் காசிபி, மஸ்ஜித் கூட்டமைப்பின் பஷீர் முகமது, வெல்ஃபேர் கட்சியின் எஸ்.என். சிக்கந்தர், சென்னை மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப்பாளர்கள் எம். ராமகிருஷ்ணன், எஸ்.குமார் உள்ளிட்டு பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.