அரசியல் சட்டத்தின் அடிப்படையில் மூன்றாண்டுகளுக்கு முன்பே நடைபெற்றிருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் அஇஅதிமுக அரசின் ஜனநாயக விரோத நிலைபாட்டின் காரணமாக தள்ளிப்போடப்பட்டது. நீதிமன்றத் தலையீட்டிற்கு பிறகே இந்த தேர்தல் நடைபெறுகிறது. அப்போதும் கூட மாநில அரசு முழுமையான தேர்தலை நடத்த முன்வரவில்லை. தேர்தல் முடிவுகளை தனக்கு ஆதரவாக அதிகாரிகளின் துணையோடு அபகரித்துக் கொள்வதற்கான நோக்கத்தோடு தான் இது செய்யப்பட்டிருக்கிறது. இந்த காலத்தில் உள்ளாட்சி அமைப்புகள் ஊழல், முறைகேடு, கமிசன் ஆகியவற்றை மட்டுமே கவனிப்பதற்கான துறையாக மாற்றப்பட்டுவிட்டது. மக்கள் நலன் என்பது முற்றிலுமாக புறக்கணிக்கப் பட்டது. இவற்றை கவனத்தில் கொண்டு வாக்காளப் பெருமக்கள் வாக்களிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அன்போடு கேட்டுக் கொள்கிறது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் தன்னலமற்று பணியாற்றியதுடன், தங்களின் உயிரையும் அர்ப்பணித்து மக்கள் நலனுக்காக போராடியிருக்கிறார்கள். உள்ளாட்சி அமைப்புகளை ஒரு மூன்றாவது அரசாங்கமாக மக்கள் தங்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கு வாய்ப்பான அரசாக பயன்படுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் கடந்த காலத்தில் செயலாற்றியிருக்கிறார்கள். இந்த கடமைகளை தொடர்ந்து நிறைவேற்றிடவும், கீழ்க்கண்ட கோரிக்கைகளை வென்றெடுக்கவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
- மருத்துவம், சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அரசுப் பள்ளிகள் பாதுகாப்பு உள்ளிட்டவைகளில் உள்ளாட்சிகள் பங்கு உறுதி செய்திட வேண்டும்.
- கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திட மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கிட வேண்டும். ஆண்டுக்கு 100 நாள் வேலை என்ற திட்டத்தை 250 நாளாக உயர்த்தி வழங்கிட வேண்டும். தினக்கூலி ரூ.600/- என நிர்ணயித்து தீர்மானிக்கும் கூலியை உடனடியாக வழங்கிட வேண்டும்.
- ஆண்டுக்கு நான்குமுறை கிராமசபை கூட்டங்கள் நடப்பதை அரசு உறுதி செய்திட வேண்டும். கிராம மக்களின் தேவைகளை திட்டமிடும் இடமாக கிராம சபைக் கூட்டங்கள் அமைந்திட வேண்டும்.
- நகர்ப்புற, ஊராட்சி, கிராமப்புற ஊராட்சிகளைப் போல வார்டு சபைகள் நடத்திட உரிய சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.
- ஊராட்சிகளில் பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள் உள்ளிட்டு காலியாக உள்ள பணியிடங்களில் புதிய ஊழியர்களை பணி அமர்த்திட வேண்டும்.
- தமிழகம் முழுவதும் கழிவுநீர் தொட்டிகள், சாக்கடைகள் சுத்தம் செய்யும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இப்பணியினை இயந்திரங்கள் மூலம் மேற்கொள்ள வேண்டும். இதனால் வேலை இழக்கும் குடும்பங்களை கணக்கெடுப்பு நடத்தி அவர்களுக்கு மாற்று வேலை வழங்கிட வேண்டும்.
- இக்கோரிக்கைகளை நிறைவேற்றிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி அமைப்பின் உறுப்பினர்கள் குரல் கொடுப்பார்கள் என்கிற உத்தரவாதத்தை வாக்காளர்களுக்கு அளிக்கிறோம். எங்களின் கடந்த கால செயல்பாடே எதிர்காலத்திற்கான உத்தரவாதம்.
- உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அதிகாரம், கூடுதல் நிதி கிடைத்திட, போராட...
- உள்ளாட்சி அமைப்புகள் தன்னாட்சி அமைப்புகளாக செயல்பட...
- உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மக்களின் குடிநீர்த் தேவை, பொது சுகாதாரம், கல்வி, தெருவிளக்கு, சாலை வசதி போன்றஅடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்திட....
- உள்ளாட்சிகளில் நேர்மையான, திறமையான, ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்தை அளித்திட.... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து குரெலழுப்பும்.
எனவே, தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில், உள்ளாட்சி அமைப்புகள் மக்கள் நலனில் அக்கறையுள்ள, ஜனநாயகப் பூர்வமான, நேர்மையான அமைப்புகளாக செயல்பட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஊராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அவர்களுக்கு அளிக்கப்பட்ட சுயேச்சை சின்னங்களிலும், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலருக்கு போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு சுத்தியல், அரிவாள், நட்சத்திரம் சின்னத்திலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உடன்பாடு கொண்டுள்ள தோழமைக் கட்சி வேட்பாளர்களுக்கு அவரவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சின்னத்திலும் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு தமிழக வாக்காளர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டிக் கேட்டுக் கொள்கிறது.
-கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)