அரசுத் தரப்பில் அதிகரிக்காத பரிசோதனைகள்
சென்னை, ஜுன் 26- தமிழக அரசு மேற்கொள்ளும் கொரோனா பரிசோதனை அளவு பாதிப்பின் எண்ணிக்கைக்கு ஏற்ப இல்லை. மிக குறைந்த அளவே அரசு பரிசோதனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் 47 அரசு பரிசோதனை மையங்களும், 41 தனியார் பரிசோதனை மையங்களும் என 88 கொரோனா பரிசோதனை கூடங்கள் உள்ளன. இவற்றில் தினசரி 30 ஆயிரம் பரிசோதனைகள் செய்ய முடியும். தமிழகத்தில் ஜூன் 25 நிலவரப்படி 9 லட்சத்து 60 ஆயித்து 674 மாதிரிகள் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது (சேம்பிள்ஸ் வேறு, நபர்கள் வேறு). இதுவரை தமிழக அரசு மாவட்ட வாரியாக பரிசோதிக்கப்பட்ட சேம்பிள்களின் விவரத்தை 2 முறை மட்டுமே வெளியிட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதற்கு மாறாக தமிழக அரசின் செயல்பாடு உள்ளது. தமிழகத்தில் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பரிசோதனைகளின் அளவு அதிகரிக்கவில்லை.
மாறாக காய்ச்சல், சளி அறிகுறியுடன் அரசு மருத்துவமனைகளுக்கு செல்வோருக்கு பெரும்பாலும் பரிசோதிக்க மறுக்கின்றனர். அறிகுறிகள் தென்பட்டாலும் மாத்திரைகளை கொடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தி அனுப்பி விடுகின்றனர். சென்னையில் தினசரி 500 காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டாலும், அதீத அறிகுறி உள்ளவர்களை மட்டுமே கொரோனா பரிசோதனைக்கு கொண்டு செல்கின்றனர். நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் ஒருசிலரை கொரோனா சோதனைக்கு கொண்டு செல்கின்றனர். ஒருவருக்கு தொற்று வந்தால் அந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய மறுப்பது இன்றளவும் சென்னை போன்ற நகரங்களில் நீடிக்கிறது. அண்மைக்காலமாக அதிகளவு பரிசோதனை நடத்துவதுபோல் தமிழக அரசு மாயத்தோற்றத்தை உருவாக்கி வருகிறது.
பரிசோதனை விவரம்
தேதி பரிசோதனை பாதிப்பு
மே 1 1,20,083 2,526
மே 15 2,90,906 10,108
மே 30 4,57,233 21,184
ஜூன் 15 7,29,002 46,504
ஜூன் 25 9,60,674 70,977
ஒவ்வொரு 10ஆயிரம் பாதிப்பையும் கடக்க எடுத்துக்கொண்ட நாட்கள்
தேதி பாதிப்பு இறப்பு நாட்கள்
மார்ச் 7 1 0 0
மே 15 10108 71 69
மே 29 20246 154 14
ஜூன் 6 30153 251 8
ஜூன் 12 40698 367 6
ஜூன் 17 50193 576 5
ஜூன் 22 62017 794 5
ஜூன் 25 70977 911 3
அதாவது, தனியார் மையங்களில் நடைபெறும் பரிசோதனைகளையும் தனது கணக்கில் சேர்த்து, அரசு செய்ததுபோல் புள்ளி விவரங்களை வெளியிடுகிறது. எனவேதான், தினசரி பரிசோதனை செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை, அவை அரசு அல்லது தனியார் பரிசோதனை நிலையத்தில் செய்யப்பட்டதா என்ற விவரங்களை எதிர்க்கட்சிகள், சமூக அமைப்புகள் கோரிய போதும் அரசு வெளியிட மறுக்கிறது. உதாரணத்திற்கு சென்னை மற்றும் புறநகர்களில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் தனியார் பரிசோதனை மையங்கள் நேரடியாக பரிசோதிக்கின்றன. அந்த நிறுவனங்கள் நடத்திய சோதனையையும் அரசு தனது கணக்கில் சேர்த்துக் கொண்டதாக தெரிகிறது. தனிநபர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனியார் பரிசோதனை மையங்களில் செய்து கொள்ளும் சோதனைகளையும் அரசு தனது கணக்கில் சேர்த்துக் கொள்கிறது. உண்மையில் அரசு மேற்கொண்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை மிக சொற்பமாகவே உள்ளது.
8 பேரில் ஒருவருக்கு...
உதாரணத்திற்கு சென்னையில் ஜூன் 20 வரை ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 701 சேம்பிள்ஸ் பரிசோதிக்கப்பட்டுள்ளது. ஜூன் 25 அன்று மாநகராட்சி ஆணையர் கூறியபடி 2 லட்சத்து 35 ஆயிரம் (நபர்களா, சேம்பிள்சா என்பது தெளிவில்லை) பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனை ஒப்பிட்டால் கடந்த 5 நாட்களில் 65 ஆயிரத்து 701 பரிசோதனை செய்யப்பட்டு 8009 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது 8 பேரில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்படுகிறது. இதில் தனியார் பரிசோதனைகள் பெரும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. எனவேதான் பரிசோதனை அதிகரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், அமைப்புகளும் கோருகின்றன. அரசு பரிசோதனையை அதிகரிக்குமா? தினசரி பரிசோதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக வெளியிடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. (ந.நி)