tamilnadu

img

காவிரியின் குறுக்கே மேலும் 3 தடுப்பணைகள்

சென்னை, ஜூலை 15- மழை வெள்ளக் காலங்களில் வெளியேறும் உபரி நீர் கடலில் கலப்பதை தடுப்பதற்காக, காவிரியின் குறுக்கே மேலும் 3 இடங்க ளில் தடுப்பணைகள் கட்ட அரசு நடவடிக்கை எடுக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  தமிழக சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுக உறுப்பினர் கே.என்.நேரு, “காவிரியின் குறுக்கே போதிய தடுப்பணைகள் இல்லாததால் உபரி நீர் வீணாக கடலில் கலப்பதாகவும் இதை தடுப்பதற்கு ஆங்காங்கே அணைகள் கட்டி தண்ணீரை தேக்கி வைப்பதால் நிலத்தடி நீர் ஆதாரத்தை பாதுகாக்க முடியும்” என்றார். இதற்கு பதில் அளித்த முதலமைச்சர், “ உபரி நீரை சேமிக்கும் வகையில் கொள்ளிடத்திலும், முக்கொம்பிலும் தடுப்பணைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கரூர்- நாமக்கல் இடையே உள்ள காவிரி ஆற்றில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார். மேலும் மூன்று இடங்களில் தடுப்பணை கட்டுவதற்கு ஆய்வு நடத்தி அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் இதற்காக அந்த பகுதியில் குடியிருப்புவாசிகள் பாதிக்காத வகையில் இடம் தேர்வு செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் முதலமைச்சர் கூறினார். மழைக்காலங்களில் எங்கெங்கெல்லாம் மழை நீர் வீணாகிறதோ அங்கெல்லாம் தடுப்பணைகள், கதவணைகள் கட்டுவதற்கும் ஓய்வு பெற்ற பொறியியல் வல்லூர் தலைமையில் 5 பேர் கொண்ட ‘நீர் மேலாண்மை’ என்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த குழு மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஆய்வுகளை நடத்தி வீணாகும் தண்ணீரை சேமிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.