அகமதாபாத், ஏப்.17-“வாக்குச் சாவடிகளில், மோடி கேமரா வைத்திருக்கிறார், நீங்க ஓட்டு போடலைன்னா கண்டுபிடிச்சுருவாரு; அப்புறம் உங்களுக்கு பிரச்சனைதான்” என்றுபாஜக தலைவர் ஒருவர், வாக்காளர்களை மிரட்டியது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநில பாஜக எம்எல்ஏவாக இருப்பவர் ரமேஷ் கட்டாரா. இவர், தாஹூத்தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், திடீரென ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து கொண்டு, பொதுமக்களை வரவழைத்துள்ளார். அந்த தெருவில் இருந்தவர்களும், ‘எம்எல்ஏ- கூப்பிடுகிறார்’ என்று வந்து பார்த்துள்ளனர். அப்போது, “பிரதமர் மோடி வாக்குச் சாவடிகளில் நிறைய கேமராக்களை பொருத்தி வைத்திருக்கிறார்; நீங்க யாருக்கு ஓட்டு போடறீங்கன்னு, அவர் தில்லியில இருந்துக்கிட்டே பார்ப்பார்.. உங்களோட போட்டோ, ஆதார் எண் எல்லாமே அவருக்கு தெரியும்.. யாராவது காங்கிரசுக்கு ஓட்டு போட்டால் அவ்வளவுதான், அப்புறம் மோடி சும்மா இருக்க மாட்டார்; அரசின் எந்த உதவியும், திட்டமும்உங்களுக்கு வந்து சேராது; வேலையும் கிடைக்காது” என்று பயமுறுத்தியுள்ளார்.மோடியின் கோபத்தில் இருந்து தப்பிக்க வேண்டுமானால், பாஜகவுக்குத்தான் நீங்கள் ஓட்டு போட வேண்டும்என்றும் கூறியுள்ளார்.பாஜக எம்எல்ஏவின் இந்த மிரட்டல், கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. ரமேஷ் கட்டாரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகளும் எழுந்துள்ளது.