புதுதில்லி:
ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, தில்லி-அரியானா எல்லையான சிங்கு, திக்ரி ஆகிய இடங்களிலும், தில்லி-உத்தரப்பிரதேச எல்லையான காஜிப்பூரிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து7 மாதங்களாக இந்தப் போராட்டம்நடந்து வருகிறது. போராட்டக்களத்தில் 350 உயிர்களைப் பலி கொடுத்தும்,அஞ்சாமல் தங்களின் கோரிக்கைக் காக அமைதி வழியில் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில்தான், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அமித் வால்மீகி என்றபிரமுகருக்கு வரவேற்பு அளிக்கிறோம் என்ற பெயரில், காஜிப்பூர் எல்லையில் குவிந்த பாஜக தொண்டர்கள் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.தில்லி - மீரட் விரைவு சாலையில் பாஜகவினர் வேண்டுமென்றே நடத்திய பேரணி, தாங்கள் போராட்டம் நடத்திய பகுதிக்கு வந்த போது விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையே சாக்காக வைத்து, விவசாயிகள் மீது தயாராகவைத்திருந்த தடிகளைக் கொண்டுபாஜக-வினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் விவசாயிகள் பலர் காயமடைந்துள்ளனர்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியான நிலையில், விவசாயிகள்தான் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் வாகனங்களை அடித்து நொறுக்கியதாகவும் பாஜக-வினர் பழிபோட்டுள்ளனர்.இதனிடையே, தாக்குதல் சம்பவம்தொடர்பாக பேட்டி அளித்துள்ள 40விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான ‘சம்யுக்தா கிசான் மோர்ச்சா’வின் செய்தித் தொடர்பாளர் ஜக்தர்சிங் பஜ்வா, ஒன்றிய அரசு திட்டமிட்டு அரங்கேற்றிய சதியே விவசாயிகள் மீதான தாக்குதல் என்று குற்றம் சாட்டியுள்ளார். “பாஜக-வினர் ரகளையில் ஈடுபடுவதை குறிப்பிட்டு, அவர்களை அப்புறப்படுத்துமாறு மாவட்டஆட்சியரிடமும், ஏனைய அதிகாரிகளிடமும் விவசாயிகள் முறையிட்டனர். ஆனால் அதிகாரிகள் கேட்கவில்லை. விவசாயிகளை, பாஜக தொண்டர்கள் வம்புக்கு இழுத்தனர். அவர்களது வாகனங்களை அவர்களே அடித்து உடைத்தனர். இதை பார்க்கும்போது, விவசாயிகள் போராட்டத்தை நசுக்க அரசின் சதியாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இதுபோன்ற தந்திரங்கள் கடந்த காலத்திலும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன. ஆனால்,அரசின் சதி வெற்றிபெறப்போவ தில்லை” என்று ஜக்தர்சிங் பஜ்வா மேலும் கூறியுள்ளார்.