tamilnadu

img

ஒலிம்பிக் ஜோதி கிரீஸில் ஜப்பான் விமானம்

32-வது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுத் திருவிழா ஜூலை 24-ஆம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்குகிறது. கொரோனா வைரஸால் இந்த ஒலிம்பிக் தொடர் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், ஒலிம்பிக் ஜோதியை பெற கிரீஸ் நாட்டிற்கு ‘டோக்கியோ 2020’ என்ற பெயரில் ஜப்பான் சிறப்பு விமானம் அனுப்பியுள்ளது. 

உலகின் எந்த மூலையில் ஒலிம்பிக் தொடர் நடைபெற்றாலும் ஒலிம்பிக் பிறந்த இடமான கிரீஸ் நாட்டில் ஒலிம்பிக் ஜோதி பெற்ற பின் தான் ஒலிம்பிக் தொடரை நடத்த முடியும். டோக்கியோ தொடருக்கான ஒலிம்பிக் ஜோதி ஒலிம்பியா நகரில் கடந்த 12-ஆம் தேதி பாரம்பரிய முறைப்படி ஏற்றப்பட்டு ஒருவாரம் கிரீஸ் நாட்டின் முக்கிய நகரங்களில் தொடர் ஓட்டமாக எடுத்துச் செல்லப்பட்டது. தற்போது அந்த ஜோதியை பெற ஜப்பான் அரசு சிறப்பு விமானத்தை அனுப்பியுள்ளது.

எவ்வளவு இழப்பீடு?

கொரோனா வைரஸால் டோக்கியோ ஒலிம்பிக் தொடர் ரத்தானால் ஜப்பானுக்கு ஏறக்குறைய ரூ.97 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விதித்துள்ளனர். மேலும் 56 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த அரிய வாய்ப்பை நழுவ விட்டு விடக்கூடாது என்பதி லும் ஜப்பான் அரசாங்கம் தீவிர முனைப்பு டன் கொரோனா வைரஸை நாட்டை  விட்டுத் துரத்த அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஒலிம்பிக் அதிகாரிகள் செல்லவில்லை.... 

உலகம் சுற்றிய ஒலிம்பிக் ஜோதியைப் பெற்றுக்கொள்வதற்காக ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவர் யோஷிரோ மோரி, ஒலிம்பிக் அமைச்சர் செய்கோ ஹஷிமோட்டோ மற்றும் ஜப்பான் ஒலிம்பிக் கமிட்டியின் முன்னணி நிர்வாகிகள் பலர் என அனைவரும் கிரீஸ் சென்று ஒலிம்பிக் ஜோதிக்கான பேட்டனை எடுத்து வருவார்கள் எனத் தொடக்கத்தில் கூறினர். ஆனால் கொரோனா  வைரஸ் அச்சத்தால் ஒலிம்பிக் குழுவினர் யாரும் செல்லவில்லை. ஏற்கனவே கிரீஸுக்கு சென்றிருந்த ஒலிம்பிக் அதிகாரிகள் தீபத்திற்குரிய பேட்டனை பெற்றுக்கொண்டு ஜப்பானுக்குத் திரும்புகிறார்கள்.