உயர் மின்கோபுரம் அமைப்ப தற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்தில், பிணையில் வெளிவந்த விவசாயிகள் மீது மீண்டும் வழக்கு போட்ட ஈரோடு காவல்துறை அதிகாரிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்தார். உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்கு சென்ற வந்த விவசாயிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வு ஈரோடு மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்று சிறை சென்ற விவசாயிகளுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார். இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோவை, ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் தொடர்ச்சி யான போராட்டங்கள் நடந்து வருகிறது. அப்போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மின்சாரம் கொண்டு செல்லக்கூடாது என கூறவில்லை. அதனை கேபிள் வழியாக எடுத்துச் செல்ல வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்கள். கேபிள் வழியாக எடுத்துச் சென்றால் கூடுதலாக செலவாகிறது. எனவே முடியாது எனத் திரும்பத், திரும்ப ஆட்சியாளர்கள் கூறி வருகிறார்கள். கூடுதல் செலவை அரசாங்கம் செய்யப் போவதில்லை. அது தனியார் நிறுவனம்தான் செய்யப் போகிறது. தனியார் நிறுவனத்தை கட்டாயப்படுத்தி கேபிள் வழியாக எடுத்து செல்ல வைப்பதற்கு மாறாக விளை நிலங்கள் வழியாக தான் எடுத்துச் செல்ல வேண்டும் என அரசு நிர்பந்தப்படுத்தி வருகிறது. இதனை எதிர்த்து போராடும் விவசாயி களை கைது செய்து வழக்குப்பதிவு செய்யும் நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் சமீபத்தில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் சங்க தலைவர்கள் 8 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்துள்ளனர். இப்பொழுது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட விவசாயிகள், பிணையில் வந்தால் மேலும் ஒரு வழக்கில் கைதுசெய்து அவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். விவசாயிகள் மீது இந்த அளவு கெடுபிடி செய்யும் அரசு, தற்போது பாலியல் குற்றங்கள் அதிகரிக்கும்பொழுது அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டுகிறது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை உரிய நட வடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகிறது.
இடைத்தேர்தல்
நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது. 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. உச்சநீதி மன்றத்தில் 3 தொகுதிகள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு விசார ணைக்கு வருகிறது. இந்நிலையில் சூலுரைச்சேர்த்து நான்கு தொகுதிகளாக மே மாதம் 13-ஆம் தேதிக்குள் நடைபெறக்கூடிய தேர்தலில் அதனையும் சேர்த்து நடத்த வேண்டும். முறைப்படி மூன்று தொகுதி களுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தி இருக்க வேண்டும். எந்த நியாயமான காரணத்தையும் நீதிமன்றத்தில் சொல்ல முடியவில்லை. தேர்தல் ஆணையம் நடுநிலைமையாக செயல்படாமல் ஆளுங்கட்சியினர் கைப்பாவையாக செயல்படுகிறது. ஆளுங்கட்சியினர் எதை சொன்னாலும் தேர்தல் ஆணையம் கேட்கவேண்டியதில்லை. இன்றைய நிலையில் தமிழகத்தில் ஆளுங்கட்சி பிரமுகர்கள் எதை வேண்டுமானாலும் செய்து வருகிறார்கள். வாகனங்களில் ஏராளமானோர் மக்களை அழைத்துச் செல்கிறார்கள். வெளிப்படையாக வாகனங்களில் மக்களை ஏற்றிச் செல்லக் கூடாது என சட்டம் உள்ளது. ஆனால் அதை மதிப்பதில்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் வேட்பாளர்கள் ஒரு பொதுக்கூட்டம் அல்லது தெருமுனைக் கூட்டத்திற்கோ, அனுமதி வாங்க வேண்டும் என்றால் அனுமதி வாங்குவதற்குள் அலுத்துப் போகும் அளவிற்கு இழுத்தடிப்பு செய்யப்படுகிறது. தேர்தல் ஆணையம் வரும் 20 நாள்களுக்கு நடுநிலையுடன் இருந்து தேர்தலை நடத்திட வேண்டும்.
ஆளும் கட்சியினர் லட்சக்கணக்கான ரூபாயை வாக்காளர்களுக்கு, ஊழியர்களுக்கு விநியோகிக்க ஆரம்பித்துள்ள னர். பல இடங்களில் பணம் விநியோகம் செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் வந்துள்ளது. தேர்தல் ஆணையம்
இதுகுறித்து கண்டுகொள்ளவில்லை. இதுகுறித்து தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்ன சலுகைகள் சொன்னாலும் பாஜக-அதிமுக கூட்டணியை மொத்தமாக தோற்கடிப்பது என உறுதியான நிலைக்கு மக்கள் வந்து உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் மதிமுக ஈரோடு மாவட்டச் செயலாளர் முருகன்,சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணனுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார். ஈரோடு சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.எம்.முனுசாமி ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனர்.
துயரின் பிடியில் ஈரோடு
ஈரோடு மிகப்பெரிய விசைத்தறி மையமாக உள்ளது. இந்நிலை யில் விசைத்தறிகளை அடிமாட்டு விலைக்கு விற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. 80 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய விசைத்தறியை வெறும் 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்கவேண்டிய நிலைக்கு வந்துள்ளது. கோவை மாவட்டத்தில் இதே நிலைமை தான். திருச்சி போன்ற இடங்களில் சிறு,குறு, நடுத்தர தொழில்கள் எல்லாம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. எதிர்காலத்தில் இந்தியாவில் இதுபோன்ற தொழிற்சாலைகள் இருக்காது என்ற நிலையை மோடி அரசு உருவாக்கியுள்ளது. இதற்கெல்லாம் அடிப்படை யான காரணம் பணமதிப்பு நீக்க நடவடிக்கையாகும்.
இருக்கிறாரா? இல்லையா?
சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போய் ஒன்றரை மாதங்கள் ஆகிறது. அவரை கண்டுபிடிக்க 12 குழுக்கள் போட்டு ள்ளதாக காவல்துறை கூறுகிறது. தற்போது அவர் உள்ளாரா, இல்லையா என்பதே பெரிய சந்தேகம். காவல்துறைதேடி கண்டுபிடிக்க முடிய வில்லையா அல்லது வேண்டுமென்றே சாக்குப்போக்கு சொல்கிறார்களா என்று தெரியவில்லை. அரசும், காவல்துறையும் கூடுதலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அது எவ்வாறு நடந்தது என்பதை காவல்துறை இந்தஉலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். அவரது குடும்பத்திடம் அவரை ஒப்படைக்க வேண்டும் என்றார்.