சென்னை:
ஈரோட்டில் அனைத்துப் பகுதி மக்களின் அன்பை பெற்றவர் அல்ஹாஜ் கே.கே.ஏ சையது அகமது அலி. சிறிது காலம் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் காலமானார். அவரது மறைவிற்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.
சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகமது, பொதுச்செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வந்த பல்வேறு சமூக அமைப்போடு தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றியவர். ஒரு பெரும் செல்வந்தர் குடும்பத் தில் பிறந்து அந்தப் பகுதியில் இருக்கிற சாதாரண ஏழை மக்களின் கல்விக்காக கணக்கற்ற அளவில் வாரி வழங்கியவர் கே.கே.ஏ சையது அகமது அலி. அனைவராலும் சேட் மாமா என்று அழைக்கப்பட்டவர்.தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு துவக்கப்பட்ட காலத்திலிருந்து ஈரோட்டில் இந்த அமைப்பின் நோக்கங்களை முழுமையாக உள்வாங்கிக்கொண்டு அனைத்து விதமான பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வின் மாநில இரண்டாவது மாநாடு ஈரோட்டில் நடைபெற்ற போது மாநாட்டின் வரவேற்புக் குழு தலைவர் பொறுப்பை ஏற்று வயது முதிர்வை பற்றிக்கூட கவலைப்படாமல் பணியாற்றியவர் சேட் மாமா.ஈரோட்டுக்கு வருகை புரியும் அனைத்து பிரமுகர்களையும் அன்போடு வரவேற்று பராமரிக்கக் கூடியவர். அன்னாரின் மறைவு சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல அனைத்துப் பகுதி மக்களுக்கும் மிகப் பெரிய இழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் ஈரோட்டில் செயல்படும் பல்வேறு அமைப்புகளுக்கும் தன்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தை தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு தெரிவித்துக்கொள்கிறது.இவ்வாறு கூறியுள்ளனர்.