சென்னை:
பாஜக அரசுகளின் மதவெறி செயல்களை கண்டித்து ஜூலை 6ஆம் தேதி கருப்பு முகக்கவசம் அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு அறிவித்துள்ளது.
இந்த அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகமது, மாநில பொதுச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அமைதி பூமியாக இருந்த லட்சத்தீவில் பாஜகவின் முன்னாள் மாநில அமைச்சர் பிரபுல் ஹோட்டா படேல் நிர்வாகியாக ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டதில் இருந்து அந்த மக்களின் வாழ்வுரிமை அனைத்தும் கேள்விக்குறியாகி இருக்கிறது.பூர்வகுடிகளான லட்சத் தீவின் பெரும்பான்மை இஸ்லாமிய மக்களை அவர்களுடைய குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றுவதற்கு, தொழிலை சிதைப்பதற்கு, உணவு பழக்கங்களை சீர்குலைப்பதற்கு, கல்வி- வேலைவாய்ப்பை கேள்விக்குறி ஆக்குவதற்கும் முயற்சி எடுத்து வருகிறார்.பிரபுல் பட்டேலின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதுடன், மக்களின் வாழ்வோடு விளையாடும் பிரபுல் பட்டேலை உடனடியாக திரும்பப் பெறவேண்டும்.குடியுரிமை திருத்த சட்டம் முஸ்லிம் மக்களின் குடியுரிமை மீது மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.இத்தகைய சூழ்நிலையில், ஐந்து மாநிலங்களில் 18 மாவட்டங்களைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாத அண்டை நாட்டினரை கணக்கெடுப்பது என்ற தீய நோக்கத்தோடு செயலில் இறங்கியுள்ளது. இந்த செயல் வன்மையான கண்டனத்துக்குரியது. மேலும், ஒட்டுமொத்தமாக சிஏஏ, என்பிஆர், என்ஆர்சி-யை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.இந்திய தேசத்தில் இருந்து பிரிக்க முடியாத மக்களான காஷ்மீர் மக்களின் தனிப்பட்ட உரிமைகளை பறித்து, மாநில அதிகாரம் என்ற உரிமைகளையும் பறித்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் அந்த மக்கள் சொல்லொண்ணா துயரங்களில் துவண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், காஷ்மீர் மாநில அரசியல் கட்சித் தலைவர்களை பேச்சுவார்த்தை என்ற பெயரில் அழைத்து கண்ணாமூச்சி காட்டுகிறது.காஷ்மீர் மக்களின் கோரிக்கையாக சிறப்புரிமைகள், மாநில உரிமையும் பிரதானமாக முன்வைக்கப்படுகிறது.நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக-வின் தோல்வி அந்த மக்களின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிப்பதாக அமைந்திருக்கிறது. எனவே காஷ்மீரில் பறிக்கப்பட்ட மாநில உரிமை, சட்டப்பிரிவு 370 உட்பட அனைத்து உரிமைகளும் மீண்டும் வழங்க வேண்டும்.இந்தியா முழுவதும் சிறுபான்மை மக்களை, அவர்களுடைய வழிபாட்டு தலங்களை குறிவைத்து தாக்கும் வேலை பாஜக ஆளும் மாநிலங்களில் நடைபெறுகிறது.
திரரபுராவில் மூன்று இஸ்லாமிய இளைஞர்கள் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் இதேபோன்று ஒரு முதியவர் தாக்கப்பட்டிருக்கிற செய்திகளையெல்லாம் பார்த்து வருகிறோம்.உத்தரப்பிரதேச மாநிலத்தில் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலம் உயர் நீதிமன்றம் தடைவிதித்த பிறகும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற மதவெறி செயல்களை பாஜக அரசு முன்னின்று நடத்துவது, ஆதரவாக இருப்பது எந்த விதத்திலும் இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்புடையதல்ல.பாஜக மற்றும் ஆட்சியாளர்கள் நேரடியாக இது போன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டனத்திற்குரியது.எனவே,வரும் 6ஆம் தேதி தமிழகம் முழுவதும் கருப்பு மாஸ்க் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு முடிவு செய்துள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பகுதி ஜனநாயக எண்ணம் கொண்டோரும் பங்கேற்று வெற்றிகரமாக்கிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.