ஈரோடு:
மாணவர்கள், பெற்றோர்களின் நலன் கருதியே பிளஸ் 2 ரிசல்ட் வெளியானதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 2-ம் தேதி முதல் மார்ச் 24 ஆம் தேதி வரை நடைபெற்றது. எனினும் கொரோனா தொற்று அச்சத்தால் கடைசித் தேர்வில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொள்ளவில்லை.12-ம் வகுப்பு இறுதித் தேர்வை சுமார் 35 ஆயிரம் மாணவர்கள் எழுதாத நிலையில், அவர்களில் 718 பேர் மட்டுமே தேர்வெழுத விருப்பம் தெரிவித்திருந்தனர். அவர்களுக்கும் தேர்வு வைத்த பின்னரே முடிவை அறிவிக்க முடியும் எனவும் முதல்வரின் ஆலோசனைப்படி 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அண்மையில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வியாழனன்று வெளியிடப்பட்டது. இதில் 92.3 விழுக்காடு மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்த நிலையில் இதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''அரசு, அரசு உதவிபெறும், மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தேர்வு முடிவுகள் அறிவிக் கப்பட்டுள்ளன. பெற்றோர், மாணவர்கள் என எல்லோரின் வேண்டுகோளையும் ஏற்று, பள்ளிக் கல்வித் துறை இம் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
12-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் இறுதித் தேர்வை 34,842 மாணவர்கள் எழுதவில்லை. தேர்வை எழுதாத மாணவர்கள் அதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை. முதல்வரின் ஆணைப்படி அனைவரும் பொதுத் தேர்வை எழுத அனுமதி வழங்கப்பட்டுள் ளது. எல்லோரின் தேர்வு முடிவுகளும் விரைந்து வெளியிடப்படும். பிளஸ் 2 இறுதித் தேர்வு எழுதாதவர்களுக்கு 27-ம் தேதி மறுதேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.