tamilnadu

img

இர்ஃபான் விவகாரத்தில் மருத்துவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்!

குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் அதனை அனுமதித்த மருத்துவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த ஜூலை மாதம் 24-ஆம் தேதி பிரபல யூடியூபர் இர்பான் மனைவிக்கு குழந்தை பிறந்தது. அப்போது குழந்தை பிறந்தது முதல் அறுவை சிகிச்சை நடைபெற்ற அறையில் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது வரை உள்ள காட்சியை கேமராவில் பதிவு செய்து அதனை தனது யூடியூப் சேனலில் கடந்த 19ஆம் தேதி இர்பான் பதிவு செய்தார்.

இந்த வீடியோவில் அறுவை சிகிச்சையின்போது, தனது குழந்தையின் தொப்புள் கொடியை இர்பான் வெட்டுகிறார். இந்த காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இர்பானின் செயல் தமிழ்நாடு மருத்துவ சட்டத்தின்படி தவறு என மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த சம்பவம் சர்ச்சையான நிலையில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை 10 நாட்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டது. மேலும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அதேபோல, பிரசவம் பார்த்த மகப்பேறு மருத்துவர் நிவேதிதா மற்றும் இர்பான் மீது நடவடிக்கை எடுக்கும்படி, செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கு மருத்துவ ஊரக நல பணிகள் துறை அதிகாரிகள் புகார் அளித்தனர்.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் மருத்துவத்துறையிடம் யூடியூபர் இர்பான் விளக்கக் கடிதம் கொடுத்தார். அதில், மருத்துவ சட்டங்களை தான் மதிப்பதாகவும், எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், தான் வெளிநாட்டில் இருப்பதால் உதவியாளர் மூலம் தனது தரப்பு வருத்தத்தை யூடியூபர் இர்பான் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் இர்பான் தனக்குப் பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில், மருத்துவமனையில் அதனை அனுமதித்த மருத்துவர் நிவேதிதாவிடம் விளக்கம் கேட்டு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.