tamilnadu

சூறாவளிக் காற்றால் பாதிக்கப்பட்ட வாழைப் பயிருக்கும் இழப்பீடு பெற முடியும்

ஈரோடு, மே 19-சூறாவளிக் காற்று மற்றும் வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட வாழை பயிருக்கும் இழப்பீடு பெற முடியும்என வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேளாண்மை காப்பீட்டு முகமை நிறுவனம் மூலம் பிரதமரின் புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டம் கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கடந்த ஆண்டு வரை வாழை பயிருக்கு ஏக்கருக்கு ரூ.3,700-க்கு காப்பீடு செய்யும் விவசாயிக்கு மழை, வெள்ளம், வறட்சி, மகசூல் பாதிப்பு, நோய் தாக்கம் போன்ற காரணங்களால் பாதிக்கப்படும்போது காப்பீட்டுக்கான இழப்பீடு தொகைவழங்கும் வகையில் விதிமுறைகள் இருந்தன. இந்த ஆண்டு முதல் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் விதிமுறைகள் குறித்து ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வி.குணசேகரன் கூறியதாவது, வாழை பயிர் பெரும்பாலான மாவட்டங்களில்சாகுபடி செய்யப்படுகிறது. இதில் வனப்பகுதியை கொண்ட மாவட்டங்களில் வன விலங்குகளாலும், சூறாவளிக் காற்றாலும் வாழைகள் பாதிக்கப்படுகின்றன. இவற்றுக்கு காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்குவதில்லை. விவசாயிகளின் தொடர் வலியுறுத்தலால் தற்போது வன விலங்குகள், சூறாவளிக் காற்றால் சேதமடையும் வாழைகளுக்கும் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து இழப்பீடு பெறும் வகையில் காப்பீட்டு விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வாழை விவசாயிகள் பயன்பெறுவார்கள். இதற்கு கூடுதல் தொகை ஏதும் செலுத்த தேவையில்லை. வழக்கமான காப்பீட்டு பிரீமியம் தொகையை மட்டும் செலுத்தி, சூறாவளிக் காற்றால் ஏற்பட்ட பாதிப்புக்கான இழப்பீட்டை பெறலாம் என்று கூறினார்.