tamilnadu

img

நெசவாளர்களுக்கு ஏற்ற வகையில் ஜிஎஸ்டி ஈரோடு நாடாளுமன்ற வேட்பாளர் அ.கணேசமூர்த்தி உறுதி

ஈரோடு, ஏப்.12- நெசவாளர்களுக்கு ஏற்ற வகையில் ஜிஎஸ்டி மாற்றி அமைக்கப்படும் என ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி உறுதியளித்தார். ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட குமாரபாளையத்தில் காவேரிநகர் பேருந்து நிறுத்தம், சந்தை திடல், நடராஜா நகர், காந்தி புரம், காட்டூர், சுந்தரம் காலனி, எல்லை மாரியம்மன் கோவில், கண்ணன் ரைஸ்மில், காளியம்மன் கோவில், எடப்பாடி சாலை மற்றும் படை வீடு பேரூராட்சிக்குட்பட்ட பச்சாம்பாளையம், நந்தமேடு, அம்மன்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஈரோடு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அ.கணேசமூர்த்தி கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது, அனைத்து விவசாயிகளின் கடன்களும் ரத்து செய்யப்படும். சமையல் காஸ் விலை பழைய முறையில் அமல்படுத்தி விலை குறைக்கப்படும். மாணவர்கள் கல்வி கடன் முழுமையாக ரத்து செய்யப்படும்.


விவசாய நிலங்களை பாதிக்கும் உயர்மின் கோபுரங்கள், கெயில் மற்றும் பெட்ரோல் பைப்லைன் பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்படும். நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு முற்றிலும் விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜிஎஸ்டி வரி விதிப்பால் வியாபாரிகள், நெசவாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நெசவாளர்கள் பாதிக்காத வகையில் உரிய திருத்தம் கொண்டு வரப்படும். இதேபோல் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் வகையில் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். மத்தியில் ஆட்சி புரிந்த பாஜக அரசின் தவறான கொள்கைகளால் நலிவடைந்து போன விவசாயம், ஜவுளி தொழில், லாரி, போர்வெல், கோழிப்பண்ணை தொழில் துறையை மீட்டெடுத்து அதை சார்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மத்தியில் மட்டுமல்லாது தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதியாகிவிட்டது. எனவே உதயசூரியன் சின்னத்தில் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். வாக்குச்சேகரிப்பின் போது திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொமதேக, மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.