ஈரோடு, மே 16-பவானி பகுதியில் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த மயானத்தை அகற்றுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், புன்னம் ஊராட்சி வேலாமத்தூர் காலனி மக்கள் சுமார் 100 ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள மயானத்தை பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது எந்தவொரு முன்னறிவிப்புமின்றி மயானத்தை வேறு பயன்பாட்டிற்கு மாற்ற அரசு நிர்வாகம் ஆக்கிரமித்துள்ளது. நீண்ட காலமாக பயன்படுத்தி வருகின்ற மயானம் வேறு பயன்பாட்டிற்கு விடப்பட்டால் சவத்தை அடக்கம் செய்திட மயானமின்றி மக்கள் சிரமப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மயான ஆக்கிரமிப்பு நடிவடிக்கையை கைவிடக்கோரியும், மேலும் மயானத்தை சீரமைத்து எரிமேடை அமைத்து, சுற்றுச்சுவர்கட்டி, தண்ணீர் வசதி செய்து தர வேண்டுமென வலியுறுத்தியும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் பவானி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பவானி வட்டாட்சியர் ஆகியோரிடம் வியாழனன்று மனு அளிக்கப்பட்டது. இதில் சங்கத்தின் தாலுகா தலைவர் டி.ரவீந்திரன், தாலுகா செயலாளர் எஸ்.மாணிக்கம் மற்றும் பலர் உடனிருந்தனர்.