திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா ஆய்வு நடத்த வியாழக்கிழமை வந்திருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவிவசாயிகளை அதிகாரிகள் அனுமதிக்க வில்லை.கொரோனா காலத்தில் விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்சனைகளை நேரில் சந்தித்து தெரிவிக்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தயாராக இருந்தன. ஆனால், அதிகாரிகள் அரசுக்கு சாதகமாகப் பேசும் ஐந்து விவசாயப் பிரதிநிதிகளை மட்டுமே அனுமதித்துள்ளனர். ஐந்து விவசாயிகள் எப்படி மாவட்ட பிரச்சனை முழுவதையும் விவாதித்திருக்க முடியும் என்றனர் விவசாயிகள்.
முதல்வரைச் சந்திக்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளை அனுமதிக்காத நிலையில், திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை தமிழக முதல்வரும், திண்டுக்கல் மாவட்ட நிர்வாகமும் முன்வரவேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.பெருமாள் கேட்டுக்கொண்டுள்ளார்.இது குறித்து அவர் வெள்ளியன்று விடுத்த அறிக்கை:-கொடைக்கானல் மலைப்பகுதியில் உற்பத்தியாகும் ஆறுகளை நீரோடைகளை ஒருங்கிணைந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விளைநிலங்களில் பாயவும், விவசாயிகள் பயன்பெறும் வகையிலும், கிராமங்களில் உள்ள கண்மாய்கள் நிரம்பும் வகையிலும் புதிய வாய்க்கால்களை அமைக்க தமிழக அரசு முன்வரவேண்டும்.
திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் கொப்பறைத் தேங்காய்களை வெள்ளக்கோவில் சந்தைக்கு தேங்காய் விவசாயிகள் கொன்டு சென்று விற்பனை செய்துவருகிறார்கள். கிலோ ரூ.100க்கு விவசாயி களிடம் கொள்முதல் செய்யப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து கொப்பரை தேங்காய்களை வாகனங்களில் எடுத்துச் செல்ல அடையாள அட்டை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நத்தத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்த விலை கிலோ ரூ.99 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த கொள்முதல் நிலையம்செயல்படவில்லை. எனவே நத்தம் கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையத்தை செயல்படுத்த தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவேண்டும். தற்போது கொய்யா விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. கிலோ ரூ.10க்கு விற்பனை ஆகிறது. பூ மார்க்கெட் கொரோனா காலத்தில் செயல்படவில்லை. இதனால் வத்தலகுண்டு, நிலக்கோட்டை பகுதி பூ விவசாயிகள் பூச்செடிகளை அழித்து மாற்று பயிர்களை பயிரிட்டனர். சில தனியார் சென்ட் தொழிற்சாலைகள் விவசாயிகளிடம் அடிமாட்டு விலைக்கு பூக்களை கொள்முதல் செய்கின்றனர். இதனால் விவசாயிகள் நஷ்டமடைந்து வருகின்றனர். விவசாய பாதிப்பு குறித்து பயிர்வாரி கணக்கெடுப்பு செய்து விவசாயிகளுக்கு கொரோனா கால நிவாரணம் வழங்க தமிழக முதல்வரும், மாவட்ட நிர்வாகமும் முன்வரவேண்டும்.