திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்துள்ள வேலாயுதம்பாளையத்தில் சமூகக் காடுகளை அழித்து சிப்காட் கொண்டு வருவதற்கு சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி திண்டுக்கல் ஆட்சியர் விஜயலட்சுமியிடம் புகார் கொடுத்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி கூறுகையில், வறட்சிப்பகுதியாக விளங்கும் வேடசந்தூரில் சிப்காட் தொழிற்சாலை கொண்டு வருவதை வரவேற்கிறோம். இந்தத் தொகுதியில் விவசாயம் செய்ய முடியாத பல ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் உள்ளன. இது தொடர்பாக அந்த நிலங்களின் விவசாயிகளிடம் அரசு பேச்சுவார்த்தை நடத்தி கையகப்படுத்தி சிப்காட் உருவாக்கலாம். இதனால் வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆனால் கடந்த 45 ஆண்டுகளாக விவசாயிகளின் உழைப்பால் உருவாக்கப்பட்ட வள்ளிமலையில் சுமார் 300 ஏக்கர் சமூகக் காட்டை அழித்து சிப்காட் கொண்டு வருவதற்கான காரணம் என்ன? அந்தப் பகுதியில் உள்ள கனிம வளங்களை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் தான் சட்டமன்ற உறுப்பினர் செயல்படுகிறார் என்றார். பேட்டியின் போது திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அர.சக்கரபாணி, செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.