ஆறு மாதங்களில் சிஐடியு 50 வயதைத் தொடுகிறது. இந்தியத் தொழிலாளிவர்க்கப் போராட்ட வரலாற்றில் கடந்த 50 ஆண்டுகளில் சிஐடியு ஈடுஇணையற்ற இடத்தைச் பெற்றுள்ளது. எழுபதுகளில் நடைபெற்ற ரயில்வே தொழிலாளர்கள் போராட்டம், மத்திய அரசு ஊழியர்களின் நியாயமான குறைந்தபட்ச ஊதியத்திற்கான போராட்டம், மாநில அரசு ஊழியர்களின் போராட்டங்கள், ஸ்தாபன ரீதியான மற்றும் உதிரித் தொழிலாளர்கள் மற்றும் பாரம்பரியத் தொழில் சார்ந்த தொழிலாளர்களின் சிறிதும் பெரிதுமான போராட்டங்கள் இவையெல்லாம் சேர்ந்து பெற்ற சாதனைகளின் பலன்களைத்தான் இன்று அரசுத் துறை ஊழியர்கள் மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த உதிரித் தொழிலாளர்களுமாகிய கோடிக்கணக்கான தொழிலாளர்கள் அனுபவிக்கிறார்கள். இந்தப் பலன்களைப் பெறுவதற்காக அனேகத் தொழிலாளர்கள் தங்கள் உயிரையும் வாழ்க்கையையும் இழந்திருக்கிறார்கள். அவர்களையெல்லாம் இன்று நாம் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறோம். சோவியத் யூனியன் வீழ்ச்சியுடன் இனி முதலாளித்துவத்திற்கு மாற்று இல்லையென்ற அகங்காரத்தில் ஏகதுருவ உலகத்தைக் கட்டமைப்பதற்காக அமெரிக்காவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள முதலாளித்துவக் கொள்கைகள்தான் உலகெங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. செலவைச் சுருக்குவதும் தனியார்மயமும்தான் முதலாளித்துவத்தை விரிவடையச் செய்வதற்கும் மக்களைக் கசக்கிப் பிழிவதற்கும் கண்டுபிடித்துள்ள இரண்டு ’கைகண்ட மருந்துகள்’. தொண்ணூ றுகளின் ஆரம்பம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிற இந்த ’சிகிச்சை’ முறையைக் குறித்து நோபல் பரிசுபெற்ற பொருளாதார நிபுணர் ஜோசப் ஸ்ட்டிக்லிட்ஸ் கூட திருப்தியடையவில்லை. இதைப் பயன்படுத்திய நாடுகளெல்லாம் தோற்றுவிட்டன என்று அவர் கூறினார். இனிமேல் இதை நடைமுறைப்படுத்துகிற நாடுகளும் தோல்வியே அடையுமென்றும் கூறினார். ஏற்கனவே பிற நாடுகளில் நடைமுறைப்படுத்தித் தோல்வியடைந்ததையே இந்தியாவில் பிடிவாதத்துடன் நடைமுறைப்படுத்துகிறது மோடி அரசு.
இந்தியத் தொழிலாளி வர்க்கம் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக நடத்திவந்த எழுச்சிப் போராட்டங்களின்-குறிப்பாக சிஐடியு உருவானதற்குப் பிறகான அரைநூற்றாண்டுக் காலம் அனைத்துத் தொழிலாளர்களையும் சாதி-மத, அரசியல் நிலைபாடுகளுக்கு அப்பால் ஒரு வர்க்கம் என்ற நிலையில் அணிதிரட்டி நடத்திய போராட்டங்களின் விளைவாக வென்றெடுத்ததாகும். இந்த வெற்றிகள் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல - அதற்காக இழப்பை ஏற்றுக் கொண்டவர்கள் தொழிலாளர்களாக இருந்தபோதிலும் அந்த வெற்றிகள் முழு சமூகத்திற்கும் இந்த நாட்டிற்கும் உரியதாகும். இந்தியாவில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை சுமார் 50 கோடி வரும். எல்லாருக்கும் எல்லா நாட்களிலும் வேலை கிடைப்பதில்லை. வாரத்தில் மூன்றோ நான்கோ நாட்கள் கிடைக்கிற வேலையின் வருமானத்தைக் கொண்டு ஏழு நாட்களும் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் மொத்தத் தொழிலாளர்களில் 35.5 சதவீதம் பேர். சொந்த வேலை செய்வோர்களாக மற்றொரு பிரிவினர் உள்ளனர். அவர்கள் 51 சதவீதம் பேர் இருப்பார்கள். மீதமுள்ள 15 சதவீதம் பேர்தான் நிரந்த சம்பளம்பெறும் தொழிலாளர்களாக உள்ளனர். நாட்டில் வியாபாரம், தொழில், விவசாயம் ஆகிய துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சிக்கு மூலகாரணம் மக்களுடைய வாங்கும் சக்தியாகும். மேலே விவரிக்கப்பட்ட 88 சதவீத வேலை செய்பவர்களுக்கும் வாரத்தில் 6 நாட்கள் வேலையும் வேலைக்கு உரிய சம்பளமும் கிடைத்தால் அவர்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும். அதற்காகத்தான் தொழிலாளர் சங்கங்கள் செயல்பட்டன. வாங்கும் சக்தி அதிகரித்தால் தேவை அதிகரிக்கும். தொழிற்சங்கச் செயல்பாடுகள் வாங்கும் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. ஆனால் மத்திய அரசின் நிலைபாடு இருக்கிற வேலையைக்கூட இல்லாமல் செய்யவும் சம்பளத்தைக் குறைக்கவும் செய்கிறது. உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவதற்கு மக்களால் இயலவில்லையென்றால் எவ்வளவு முதலீடு இருந்தாலும் வளர்ச்சி ஏற்படப் போவதில்லை.
சம்பளத்தை அதிகரிக்கச் செய்கிற தொழிற்சங்க நடவடிக்கையானது வாங்கும் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. அதன் மூலம் விவசாயம் மற்றும் தொழில்துறைகளில் உற்பத்தி அதிகரித்து கூடுதல் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். முதலாளித்துவப் பொருளாதார அமைப்பின் குழப்பத்திற்குக் காரணம் வாங்கும் சக்தி குறைவதாகும். பெருமளவு சம்பளத்தைக் (செலவு) குறைத்து லாபத்தைப் பெருக்கி முதலாளித்துவம் தனது செல்வத்தைக் குவிக்கிறது. அது தொழிலாளர்களின் வாங்கும் சக்தியைக் குறைக்கும். மேலும் தொழில்நுட்பப் பயன்பாடும் இயந்திரமயமும் உள்ள தொழில் இல்லாமல் போகும். அறிவியல் - தொழில்நுட்பத் துறையில் உண்டாகிற வளர்ச்சியை உற்பத்தித் துறையில் பயன்படுத்தித்தான் நவீன முதலாளித்துவம் வளர்கிறது. ஆனால் நவீன தொழில்நுட்பத் திறனும் இயந்திரங்களின் விரிவான பயன்பாடும் தொழிலாளர்களை வேலை இல்லாதவர்களாக ஆக்கும். உற்பத்தியை அதிகரிக்கும் என்றாலும் அது மக்களுடைய வாங்கும் திறனைக் குறைக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. அது பெரும் வேலையில்லாதோர் பட்டாளத்தை உருவாக்கும். தற்போது வேலையில் உள்ளவர்களை வேலையிழப்பில் தள்ளிவிடுகிறது மத்திய அரசாங்கம். 80,000 பிஎஸ்என்எல் ஊழியர்கள் விருப்ப ஓய்வில் வெளியேற நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை ஒன்றிணைத்து அவைகளின் கிளைகளை மூடி ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கிறார்கள். ரயில்வேயில் 20 லட்சம் பேர் வேலை செய்யும் இடத்தில் 12 லட்சத்திற்குக் குறைவானவர்கள் மட்டுமே தற்போது உள்ளனர். ரயில்வே இருப்புப் பாதைகளும் ரயில்களும் முதலாளிமார்களுக்கு வாடகைக்கு மத்திய அரசு கொடுக்கிறது. மேக் இன் இந்தியா கோஷத்தை முழக்கி மோடி வேலையில்லாதவர்களுக்கு ஆசை வார்த்தை காட்டியது தவிர 200 பேர்க்கு வேலை வழங்குகிற ஒரு தொழிலும் வரவில்லை. அன்னிய மூலதனம் இந்தியாவிற்கு வந்தது இந்தியாவில் லாபத்தில் இயங்குகிற பொதுத்துறைத் தொழில் நிறுவனங்களை குறைந்த விலையில் தட்டிக்கொண்டு போகத்தான். அத்துடன், அங்கே வேலை செய்பவர்களின் வேலையும் சேவை ஏற்பாடுகளும் இல்லாமல் போகும். ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் ஏற்படுத்துவேன் என்று கூறி வேலையில்லாதவர்களை ஏமாற்றியதுடன் இந்த காலஅளவில் வேலையில் இருந்த ஒன்றேகால் கோடி தொழிலாளர்களை வேலையிழக்கவும் செய்தார் மோடி.
மக்கள் தொகை நிபுணர்களின் கணக்குப்படி, மக்கள் தொகையில் 18 வயது நிறைவடைந்த இரண்டரை சதவீதம் பேர் ஒவ்வொரு வருடமும் வேலை தேடுபவர்களாக இருப்பார்கள். இவர்களுடைய எதிர்காலமும் இருள் நிறைந்ததாக ஆகும். தொழிலாளர்கள் இல்லாத தொழில்கள் நடத்தி லாபம் குவிக்கத்தான் நவீன முதலாளித்துவம் முயற்சி செய்கிறது. அதற்காக முதலாளிகள் விஞ்ஞானத்தையும் தொழிலுநுட்பத் திறனையும் சார்ந்திருக்கிறார்கள். 2020-ல் ஒரு கோடி ரோபோட்டுகள் (இயந்திர மனிதன்) வருமென்று அறிவித்திருக்கிறார்கள். அவர்கள் மருத்துவமனைகளிலும் ஹோட்டல்களிலும் விநியோக மையங்களிலும் தாமாக இயங்குவார்கள். பால் கறப்பது, பழங்கள் பறிப்பது, வாகனங்களில் பொருட்களை ஏற்றுவதும் இறக்குவதும் செய்வது, ஹோட்டல்களில் காப்பி சப்ளை செய்வது, அறுவைச் சிகிச்சை முடித்து பேண்டேஜ் துணியைக் கட்டுவது, செங்கல்களை அடுக்கி வீடு கட்டுவது, பெயின்ட் பூசுவது ஆகிய இவற்றையெல்லாம் அவர்கள் செய்வார்கள். ஒரு ரோபோட் நான்கு முதல் பத்துத் தொழிலாளர்களின் வேலையைச் செய்யும். டிரைவர் இல்லாத காரும் பைலட் இல்லாத ரயிலும் விமானமும் வருமாம். பிறகு இந்த மனிதனோ கொட்டாவி விட்டபடி சும்மா இருந்தால் போதும். இதைத்தான் நவீன முதலாளித்துவ அமைப்பு நடைமுறைப்படுத்தவிருக்கிறது. இதைப்பற்றி ’லால் பான்கார்டியா’’ என்ற நூலுக்கு போப்பு திருமேனி பிரான்சிஸ் போப்பாண்டவர் அளித்த அணிந்துரையில் கூறப்பட்டுள்ள வார்த்தைகள் முக்கியத்துவமானவையாகும். இன்றைய உலகப் பொருளாதார அமைப்பு நீடித்திருக்க முடியாது. இந்த முதலாளித்துவ அமைப்பு தொடர்கிறவரை மக்களின் துக்கமும் துயரமும் ரத்தம் சிந்துவதும் தீவிரமடைந்து கொண்டிருக்கும்.
தோழர்களே! நமது நிகழ்காலமும் வரும் தலைமுறையும் துன்ப துயரங்களையும் ரத்தம் சிந்துவதையும் அனுபவிக்காமல் இருக்க, ஒரு நூற்றாண்டுக் காலம் தியாகம் நிறைந்த செயல்பாடுகள் மூலமாகப் பெற்றவற்றை வரும் தலைமுறைக்காகப் பாதுகாத்து வைப்பதற்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம். ஆகவே, நமது மூத்த தலைவர்கள் உயிர்த்தியாகம் செய்து பெற்றுத் தந்த சாதனைகளைக் கைவிடாமல் பாதுகாக்க எந்தத் தியாகமும் செய்ய நாம் தயாராக வேண்டும். அரசாங்கத்தின் மிரட்டலை தோல்வியுறச் செய்ய மக்கள் முன்வருகிற நேரம் கைகூடி வருகிறது. மக்களை வழிநடத்துகிற வரலாற்று ரீதியான கடமையை நிறைவேற்றுவதற்குத் தொழிலாளி வர்க்கம் ஒன்றாக இணையவில்லையென்றால் வரலாறு நம்மை மன்னிக்காது! ஒற்றுமை-ஒற்றுமை மேலும் ஒற்றுமை என்ற சிஐடியு அகில இந்திய மாநாட்டின் முழக்கம் ஓங்கிப் பரவும் என்று நாம் நம்புவோமாக!