tamilnadu

img

ரயிலில் பயணிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூல்....

தில்லி 
புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ளனர், இவர்களை சொந்த ஊரில் கொண்டுபோய்ச் சேர்க்க மத்திய அரசு ஷ்ரமிக் சிறப்பு ரயில்களை இயக்குகிறது, இதற்காக சாதாரண படுக்கை வசதி வகுப்பு கட்டணத்தை விட கூடுதலாக அவர்களிடம் கட்டணம் வசூலிக்கிறது ரயில்வே போர்டு. மே 1-ம் தேதி முதல் இது அமலுக்கு வந்தது.
மாநில அரசுகளின் கோரிக்கைக்கு ஏற்பத்தான் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே தெரிவித்திருந்த நிலையில் படுக்கை வசதி வகுப்பு கட்டணத்துடன் பயணி ஒருவருக்கு கூடுதலாக ரூ.50 வசூலிக்கப்படும் என்று ரயில்வே வாரியம் அறிவித்தது.

உதாரணமாக சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு ரூ.260 கட்டணம். தூரத்தைப் பொறுத்து கட்டணம் மாறுபடும். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்களை அழைத்து வருவதற்கு தமிழக அரசு இன்னும் கோரிக்கை வைக்கவில்லை என்றாலும், நாட்டில் இயக்கப்படவுள்ள அனைத்து சிறப்பு ரயில்களிலும் கூடுதல் கட்டணங்கள் பொருந்தும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
தெற்கு ரயில்வே உட்பட பல்வேறு ரயில்வே மண்டலங்கள் ஒரு பயணிக்கு ரூ.50  வசூலிக்குமாறு ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

தென் மத்திய ரயில்வே இயக்கும் சிறப்பு ரயிலைப் போல், தெற்கு ரயில்வே கொச்சியில் இருந்து புவனேஸ்வர் வரை சிறப்பு ரயிலை இயக்குகிறது என்று ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது குறித்து சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ஏழைத் தொழிலாளர்களிடமிருந்து இந்தக் காலக்கட்டத்தில் பாஜக அரசு கட்டணம் வசூலிப்பது வெட்கக்கேடானது என்று ட்வீட் செய்துள்ளார். இது தொடர்பாக இந்தி மொழியில் அவர் பதிவிட்ட ட்விட்டரில், "வேலையின்றி தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் புலம்பெயர்ந்தோரிடம் ரயில் கட்டணம் வசூலிப்பது வெட்கக் கேடானது. பேரழிவு நேரத்தில் சுரண்டுவது பணக்காரர்களின் வேலை. அது அரசாங்கத்தின் வேலையல்ல என பதிவிட்டுள்ளார்.

இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு பேட்டியளித்துள்ள ஜார்கண்ட் முதல்வர் ஹேமென்ட் சோரன், "புலம் பெயரும் தொழிலாளர்களிடம்  ரயில் கட்டணம் வசூலிப்பது அநீதி. இந்த நடவடிக்கை வருத்தமளிப்பதாக உள்ளது. மத்திய அரசு தனது முடிவை மறுபரீசீலனை செய்ய வேண்டுமெனக் கூறியுள்ளார். புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து எந்தக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது. "பிஎம்கேர்" நிதியிலிருந்து பணம் வழங்க வேண்டுமென பலர் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் புலம்பெயர்ந்தோரிடமிருந்து சிறப்பு ரயில்களில் பயணிக்க ரயில்வே கூடுதல் பணம் வசூலிப்பதாகக் கூறி போலி செய்திகளை வெளியிடுதாக ரயில்வே தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் மோடி அரசு எடுத்த முயற்சிகளை இழிவுபடுத்துவதற்கான ஒரு ஒருங்கிணைந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  பயணிகள் பயணத்திற்கு எதையும் செலுத்தத் தேவையில்லை, ஏனெனில் ஒரு பயணிக்கு கூடுதல் 50 ரூபாய் உட்பட முழுக் கட்டணத்தையும் செலுத்த மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன என ஒபிஇந்தியா இணையதளம் தெரிவித்துள்ளது.

-தி இந்து, ஓபி இந்தியா இணையதள தகவல்களிலிருந்து....